ADDED : அக் 28, 2025 11:37 PM
'ஆர்யன்' படத்தில் மலையாள பட இன்ஸ்பிரேஷன்
விஷ்ணு விஷால் நடிக்கும் 'ஆர்யன்' படம் அக்.,31ல் ரிலீசாகிறது. இதில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணுார் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் எனக் கூறியுள்ளார் விஷ்ணு விஷால். ஒரு போலீஸ் அதிகாரியும், 4 பேர் கொண்ட குழுவும் பல மாநிலங்களுக்கு சென்று குற்றவாளியை பிடிப்பது தான் கண்ணுார் ஸ்குவாட் கதை.
தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகம்
தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களை இயக்கிய செல்வராகவன், இதன் 2ம் பாகங்களை எடுப்பதாக கூறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபற்றி பேசிய செல்வராகவன், ''இந்த படங்களுக்கு இருவரிடமும் 3 ஆண்டுகள் கால்ஷீட் கிடைக்காது. கதையும் முழுமையாக முடிக்கவில்லை. இவர்கள் இல்லாமலேயே மற்ற நடிகர்களை வைத்து படத்தை என்னால் முடிக்க முடியும்'' என்றார்.
தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா
மலையாள நடிகை மற்றும் இயக்குனர் ஷாலின் ஜோயா. தமிழில் 'கண்ணகி' படத்தில் நடித்தார். 'டிவி' நிகழ்ச்சிகளிலும் வலம் வருகிறார். இப்போது தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இதில் அருண், பிரிகிடா, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜோயா கூறுகையில், ''கிராமத்து பின்னணியில் 90களில் நடக்கும் நகைச்சுவை பேண்டஸி கதை இது'' என்றார்.
பிஎம்டபுள்யூ கார் பரிசு
சசிகுமார், சிம்ரன் நடித்து வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' எனும் வெற்றி படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இவருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசளித்துள்ளார் இதன் தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான். இப்போது இவர் தயாரிக்கும் புதிய படத்தில் தான் அபிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அனஸ்வரா ஹீரோயின். சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது.

