ADDED : செப் 30, 2026 04:52 AM
ஹிப்ஹாப் ஆதிக்கு தேவா தந்த முத்தம்
கானா பாடகர்களின் வலியை சொல்லும் படமாக கடந்தவாரம் வெளியானது 'மீசைய முறுக்கு 2'. ஹிப்ஹாப் ஆதி, நடித்து, இயக்கி, இசையமைத்து இருந்தார். தமிழ் சினிமாவில் கானா பாடலுக்கு அடையாளம் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. அவர் 'மீசைய முறுக்கு 2 'படம் பார்த்துவிட்டு ஆதியை பாராட்டி, முத்தமிட்டு வாழ்த்தினார். 'இது போதும் எனக்கு இது போதுமே' என குறிப்பிட்டு தேவாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதி.
'தர்மன்-'ல் இணைந்தார் ராம் பொதினேனி
'ஜெயிலர் 2'வை அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் ரஜினி நடிக்கிறார். சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். மருத்துவ பின்னணியில் கிரைம் திரில்லராக, ஆக் ஷன் படமாக உருவாகிறது. டாக்டராக ரஜினி நடிக்கிறார். இதில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பதாக தகவல் பரவியது. இப்போது மைசூருவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார். படப்பிடிப்பு ஓய்வில் ரஜினி, ராஷி மற்றும் ராம் நடைபயிற்சி செய்தபோது எடுத்த போட்டோ மூலம் இது உறுதியாகி உள்ளது.
இந்தவாரம் எத்தனை படங்கள் ரிலீஸ்
2026 ல் செப்டம்பர் மாதம் இன்றுடன் முடிகிறது. இதுவரை 170 தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. நாளை அக்., 1ல் விஜய் சேதுபதியின் 'பத்தா', நிவின் பாலி, சூரியின் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களும், அக்., 2ல் அசோக் செல்வனின் 'அன்பில் அவன்', முதல்வர் விஜய் மகன் ஜேசன் இயக்கிய 'சிக்மா' மற்றும் அசோக்கின் 'கிட்டி' என 5 படங்கள் ரிலீஸாகின்றன.
ரூ.30 கோடி செலவில் 10 மாடி கட்டடம்
சென்னை வடபழனியில் உள்ள சினிமா இசையமைப்பாளர்கள் சங்க பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர். ரூ.30 கோடி செலவில் 10 மாடி கொண்ட கட்டடமாக இது உருவாகிறது. இதற்கான நிதியை திரட்ட சென்னை, ஐதராபாத், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்களில் இசைக் கச்சேரி நடத்த உள்ளனர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் சங்க நிதிக்கு கச்சேரி நடத்த 'ஓகே' சொல்லி உள்ளனர்.
