இம்மாதம் பட ரிலீஸ் மந்தம்
இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் 65 படங்கள் ரிலீசாகியுள்ளன. இப்படியான சூழலில் ஏப்.10ல் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி', 18ல் சிபிராஜ் நடித்த 'டென் ஹவர்ஸ்', 24ல் சுந்தர்.சி, வடிவேலு நடித்த 'கேங்கர்ஸ்' ஆகிய 3 மட்டுமே குறிப்பிடும்படியான படங்களாக வெளியாக உள்ளன. அதேபோல் ஏப்.18ல் விஜய் நடித்து வெளியான 'சச்சின்' படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. அஜித் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆகியவையே இம்மாதம் குறைவான படங்கள் வெளியாக காரணம் என்கின்றனர்.
முதல் முறையாக இரண்டு வேடங்களில் அல்லு அர்ஜூன்
'புஷ்பா 2' படத்திற்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஏப்.8ல் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகிறது. இப்படத்தில் அவர் இரட்டை சகோதரர்களாக நடிக்க உள்ளாராம். சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆனாலும் இப்போது தான் அவர் முதல்முறையாக இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
சித்தார்த் உடன் திருமணம் ஏன்: அதிதி
மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்த அதிதிராவ் ஹைதரி, கடந்தாண்டு நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்தார். இதுப்பற்றி பேசிய அதிதி, ''சித்தார்த்தை திருமணம் செய்ய ஒரு நொடிக்கூட யோசிக்கவில்லை. செயற்கை தனம் இல்லாத நல்ல மனிதர். எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் அன்பானவர். அவரின் நல்ல செயல்பாடுகள் தான் திருமணம் செய்ய காரணம். தற்போது அவரவர் பாதையில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளோம்'' என்றார்.
ரூ.200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்'
மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கிய 'எல்2 எம்புரான்' படம் கடந்த வாரம் வெளியானது. ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வில்லன் பெயர் என தொடர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், 2 நிமிட காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்து திரையிடப்பட்டது. ரிலீசாகி 5 நாட்களில் இப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் 200 கோடி வசூலை கடந்த 2வது மலையாள படமானது. முதலிடத்தில் ரூ.250 கோடியுடன் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உள்ளது.
ஜூலையில் 'மாரீசன்' ரிலீஸ்
மாரி செல்வராஜ் இயக்கிய 'மாமன்னன்' படத்தில் வடிவேலு, பஹத் பாசில் இணைந்து நடித்தனர். படம் வெற்றிபெற்ற நிலையில் இந்த இருவரும் 'மாரீசன்' எனும் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் ஜூலையில் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை படக்குழு குறிப்பிடவில்லை.
நடிகையின் ஆபாச வீடியோ: சின்மயி காட்டம்
சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது 'ஏஐ' மூலமாக சித்தரித்து உருவாக்கப்பட்டதாக ஸ்ருதி விளக்கம் கொடுத்தார். இதுபற்றி பாடகி சின்மயி வெளியிட்ட பதிவு: சில பெண்கள் சமரசம் செய்ய மறுத்தால் வாய்ப்புகளை இழக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான இடத்தில் நிமிர்ந்து நிற்க முயற்சித்தால் இச்சமூகம் அவரை குற்ற வாளி ஆக்குகிறது. இது போன்ற மனப்போக்குடைய ஆண்கள், ஊடகங்கள், திரைப்பட, தொலைக்காட்சி துறையில் இருப்பது கேவலம். கலையின் துாய்மை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தீய சக்திகள் முழுவதுமாக நாசமாக போக வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

