/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு; பில் கலெக்டர்கள் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
/
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு; பில் கலெக்டர்கள் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு; பில் கலெக்டர்கள் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு; பில் கலெக்டர்கள் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 16, 2025 01:07 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு புகார் தொடர்பாக 6 பில் கலெக்டர்கள், ஒரு புள்ளிவிபர குறிப்பாளரை 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் சித்ரா உத்தரவிட்டார்.
இம்மாநகராட்சியில் 2023, 2024 ல் ஏராளமான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்து வரி நிர்ணயித்து ரூ.பல கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. விதிப்படி வரியை குறைத்து நிர்ணயித்து அனுமதியளிக்கும் கமிஷனர், துணை கமிஷனர்கள் 'பாஸ்வேர்டு'களை பயன்படுத்தியும் சிலர் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் 2024ல் அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் 5 பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்தார்.
மேலும் 13 பேர் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே இப்புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அறிக்கை அடிப்படையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறி முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இப்புகார் தொடர்பாக மாநகராட்சி அலுவலர், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியினர் என 55 பேர் பட்டியலை போலீசார் தயாரித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்முறைகேட்டில் தொடர்புடைய மண்டலம் 3 அலுவலகத்தில் புள்ளி விபர குறிப்பாளர் கருணாகரன், பில் கலெக்டர்கள் (பொறுப்பு) கண்ணன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஆதிமூலம், ரஞ்சித் செல்வகுமார், பெலிக்ஸ் ராஜமாணிக்கம் ஆகியோரை கமிஷனர் சித்ரா 'சஸ்பெண்ட்' செய்தார்.
இவ்விவகாரத்தில் மேலும் பில் கலெக்டர்கள் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.