/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி சொத்துவரி ஆய்வுக்கு செயல் திட்டம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மதுரை மாநகராட்சி சொத்துவரி ஆய்வுக்கு செயல் திட்டம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாநகராட்சி சொத்துவரி ஆய்வுக்கு செயல் திட்டம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாநகராட்சி சொத்துவரி ஆய்வுக்கு செயல் திட்டம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 21, 2025 08:13 AM

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, சிறப்புக்குழு உறுதிப்படுத்த செயல்திட்டத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் மேயர் மற்றும் மண்டல தலைவர்களால் சொத்து வரி முறைகேடு நடந்துள்ளது. மோசடியால் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூலை 17ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: இந்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த மாநகராட்சி (வருவாய்த்துறை) துணை கமிஷனர் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவை கமிஷனர் அமைத்துள்ளார்.
மாநகராட்சி பகுதியில் வரி செலுத்தும் வரம்பில் 3 லட்சத்து 49 ஆயிரம் கணக்குகள் உள்ளன.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன்: 2022-24 காலகட்டத்தில் நடந்த வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை கோரி கமிஷனர் போலீசில் புகார் அளித்துள்ளார். எப்.ஐ.ஆரில் மோசடிக்கான பிரிவை சேர்க்கவில்லை. வரி முறைகேடு தொடர்பான சொத்துக்களில் ஆய்வு செய்யவில்லை. விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் முந்தைய சில ஆண்டுகளில் வரி விதிப்பு தொடர்பாக விசாரிக்கப்போவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள்: முந்தைய ஆண்டுகளில் சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரித்தால் என்ன பிரச்னை. முறைகேடு எந்த ஆண்டில் நடந்திருந்தாலும் விசாரிக்க வேண்டும். மக்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டும். சொத்து வரி நிர்ணயம் தொடர்பான ஆய்வு முறையாக, சட்டப்படி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
வரி நிலுவையை வசூலிக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் புதிதாக வழக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
வீரா.கதிரவன்: முறைகேடு வழக்கு விசாரணையில் தேவையானபோது உரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சொத்து வரி நிர்ணயித்ததை மறு ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனர் சிறப்பு குழுவை அமைத்துள்ளார்.
எவ்வளவு காலவரம்பிற்குள் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என்பதற்குரிய செயல் திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. சிறப்பு குழுவிற்கு உதவும் வகையில் தேவைப்பட்டால் ஒவ்வொரு மண்டலத்திலும் துணை தாசில்தார்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வது குறித்த செயல் திட்டத்தை கலெக்டர், கமிஷனர் ஆக.26ல் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துவரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரிக்கும் மதுரை டி.ஐ.ஜி.,தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை தொடரலாம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.