ADDED : செப் 04, 2011 01:20 AM
மதுரை : மதுரையில் 'ராகப்ரியா' மியூசிக் கிளப் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா அற்புதமாக பாடி இசை ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
கச்சேரியின் தொடக்கமாக மதுரை மீனாட்சி மீது ஒரு வர்ணம். நாட்டக்
குறிஞ்சி ராகத்தில் புதிய படைப்பாக பக்தியுடன் இருந்தது. அடுத்தது 'ஸ்ரீமகா கணபதே' என துவங்கும் ஆபோகி ராக கீர்த்தனை. முத்துசாமி தீட்சிதரின் அபூர்வ கீர்த்தனையாக அழகாக வழங்கினார். தொடர்ந்து பலகரிராகத்தில் 'தன்யூவெடோ'என்ற பாடலில் 'வர மத்தள தாளம்' என்ற வரிகளில் நிரவல் செய்து தனது திறனை வெளிப்படுத்தினார். 'வரத வெங்கடேச' முத்திரையோடு அற்புதமான கிருதியை வழங்கினார். இவருடைய பாடல்கள் முழுவதும் அம்பாள் வழிபாடாகவே அமைந்தது. சகானா ராகத்தில் மீனாட்சி துதியை விருத்தமாக பாடியதுடன் 'ஸ்ரீ மதுராபுரி வாகினி' என்ற பாடல் நிரவல் நல்ல பாவத்துடன் பக்தியுடன் அமைந்திருந்தது. 'வாசஸ்பதி' ராக ஆலாபனை செய்து 'பராத்பரா பரமேஸ்வரா' என்ற கீர்த்தனையை பாடிய போது அரங்கம் இசையால் நிரம்பி வழிந்தது. நிரவல் கற்பனா சுரத்தில் நல்ல தாளகட்டை காண முடிந்தது. வயலின் கோவிந்தராஜன் நல்ல பரிமளிப்பான வாசிப்பு. மெயின் ராகமாக காம்போதி ராக ஆலாபனை, 'திருவடி சரணம் என்றென்று நான் நம்பி வந்தேன்' என துவங்கும் கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் பாடல். ஆதிதாளம். மனதில் தங்கும் படியாக நிறைவான கச்சேரியை வழங்கி தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார் இளம் பாடகர் ஐஸ்வர்யா. பக்கவாத்தியத்தில் திருச்சி கோவிந்தனும், நாஞ்சில் அருளும் கச்சேரியை மெருகூட்டினர்.