/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதில் 'இடியாப்ப சிக்கல்'! நவீன கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பலனில்லை
/
மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதில் 'இடியாப்ப சிக்கல்'! நவீன கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பலனில்லை
மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதில் 'இடியாப்ப சிக்கல்'! நவீன கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பலனில்லை
மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதில் 'இடியாப்ப சிக்கல்'! நவீன கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பலனில்லை
ADDED : ஆக 10, 2024 05:27 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.பல நுாறு கோடியில் மருத்துவ கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் இன்னமும் கழிவுநீர் செல்வதற்கான பாதை சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
1940 ல் 14 ஏக்கரில் இம்மருத்துவமனை கட்டப்பட்ட போது ஆயிரம் நோயாளிகள் எண்ணிக்கை வரை கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும். 84 ஆண்டுகளைக் கடந்த நிலையில் தினமும் 10ஆயிரம் நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மதுரை மாநகராட்சியான போது இங்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. 45 ஆண்டுகளை கடந்த நிலையில் பாதாள சாக்கடை திட்டம் நவீனப்படுத்தவில்லை. இன்னமும் ஆங்காங்கே மண் கால்வாய்கள் இருப்பதால் கழிவுநீர் அடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
சில நுாறு நோயாளிகளுக்காக கட்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் 4000 உள்நோயாளிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட புறநோயாளிகளின் பயன்பாட்டை தாங்க முடியாமல் திணறுகிறது.
தினமும் ஏதாவது ஒரு வார்டின் சாக்கடை மேன்ஹோலில் கழிவுநீர் பெருகி நாற்றமடிக்கிறது. சில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சை வார்டு முன்புறமிருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது.
முழுவதும் மண் அடைத்துள்ள நிலையில் கழிவுநீர்ப்பாதை சீரமைக்கப்படுகிறது. சிகிச்சை தரமாக இருந்தாலும் கழிவுநீர் துர்நாற்றம் தாங்க முடியாமல் நோயாளிகள் திணறுகின்றனர். இதுவே நோயாளிகளின் சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளது.
இங்கு ரூ.315 கோடி மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய ஆறுமாடி கட்டடம் கட்டும் போது இதற்கென தனியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பழைய பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரும் மாநகராட்சி மூலம் வெளியேற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால் புதிய கட்டடத்தின் கழிவுநீர் திட்டத்தை பழைய திட்டத்துடன் செயல்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பழைய திட்டத்தில் எந்த பாதை வழியாக எந்த கழிவுநீர் குழாய் வருகிறது என்பது இடியாப்ப சிக்கல் போல் நீள்கிறது. பழைய வளாகத்தின் கழிவுநீரை இடையூறின்றி மாநகராட்சி கழிவுநீர் குழாயுடன் இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலமே சுகாதாரமான மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனையாக மாறும்.

