/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பயோமெட்ரிக் வருகைப்பதிவில் குளறுபடி
/
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பயோமெட்ரிக் வருகைப்பதிவில் குளறுபடி
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பயோமெட்ரிக் வருகைப்பதிவில் குளறுபடி
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பயோமெட்ரிக் வருகைப்பதிவில் குளறுபடி
ADDED : பிப் 01, 2024 07:26 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி டாக்டர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் நிறைய விடுபட்டும் குளறுபடியும் காணப்பட்டதால் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி டாக்டர்கள் பணிபுரிகின்றனர். டாக்டர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் வருகை தொடர்பான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை இணையதளம் மூலமாக காலை 9:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திடீரென இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டாலோ சர்வர் பிரச்னையாலோ வருகை பதிவேடு கருவியில் விரல் வைத்தாலும் கம்ப்யூட்டரில் பதிவாகவில்லை என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: வருகை பதிவேட்டு கருவி அவ்வப்போது பழுதடைகின்றது அல்லது இணையதள பிரச்னையால் பதிவு செய்ய முடியவில்லை. ஒருவருக்கு பதிவாகா விட்டால் அடுத்து வரிசையாக காத்திருக்கும் அனைவருக்குமே பதிவேடு பராமரிக்க முடியவில்லை.
இது காலையில் வருகை தரும் டாக்டர்களின் வருகை பதிவேட்டை மட்டுமே கணக்கில் கொள்கிறது. பிற்பகல் மற்றும் இரவு பணியாற்றும் பேராசிரியர்களின் பதிவேட்டை கணக்கில் கொள்ளவில்லை.
90 சதவீத டாக்டர்கள் காலை 9:00 மணிக்குள் பதிவு செய்து வருகிறோம். டாக்டர்களை இடமாற்றம் செய்யும் போது அவர்களது வருகை பதிவேட்டை மாற்றிவிட்டு புதிய டாக்டர்களின் வருகை பதிவேட்டை இயந்திரத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதற்கான தொழில் நுட்ப வசதியை உடனுக்குடன் செய்ய முடியவில்லை. அதுவும் வருகை பதிவேடு குளறுபடிக்கு முக்கிய காரணம் என்றனர்.
பிரச்னையை அடுத்து தேசிய மருத்துவ ஆணையம், டீன் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகை பதிவேட்டு நடைமுறைகளை முறையாக பயன்படுத்தாவிட்டால் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான சீட் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
டீன் ரத்தினவேலிடம் கேட்டபோது, ''மதியம் மற்றும் இரவு நேர டாக்டர்களின் வருகை பதிவேடு அக்டோபர் 2023ல் சரிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து சாப்ட்வேர் சிக்கல்களும் சரி செய்யப்பட்டுள்ளதால் இனி பிரச்னை வர வாய்ப்பு இல்லை'' என்றார்.