/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்சோ வழக்கை விசாரிக்கும் போது குழந்தையின் நலனை பாதுகாக்க வேண்டும் விசாரணை நீதிமன்றங்களுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
/
போக்சோ வழக்கை விசாரிக்கும் போது குழந்தையின் நலனை பாதுகாக்க வேண்டும் விசாரணை நீதிமன்றங்களுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
போக்சோ வழக்கை விசாரிக்கும் போது குழந்தையின் நலனை பாதுகாக்க வேண்டும் விசாரணை நீதிமன்றங்களுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
போக்சோ வழக்கை விசாரிக்கும் போது குழந்தையின் நலனை பாதுகாக்க வேண்டும் விசாரணை நீதிமன்றங்களுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 15, 2026 03:05 AM
மதுரை: 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்னையை நீதிமன்றங்கள் விசாரிக்கும் போது, குற்றம் புரிந்தவரின் நலனை விட, குழந்தையின் நலனே முக்கியமானது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பகவதிராஜ் உள்ளிட்ட இருவர் மீது, போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்த்து, பகவதிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: புகார் அளித்ததில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய காரணத்தை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வழக்கில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுதாரர் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மனுதாரரின் கோரிக்கை எதுவும் இல்லாமல் விசாரணை நீதிமன்றம் ஒரே விசாரணையாக சேர்த்து நடத்தியது.
இருவரும் ஒரே குற்றத்தை செய்யவில்லை. வெவ்வேறு தேதிகள், நேரம், இடங்களில் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் சேர்த்து ஒரே விசாரணையை நடத்தியிருக்கக்கூடாது. இது, மனுதாரருக்கு பாதகமாக முடிந்துள்ளது.
சாட்சியங்களில் முரண்பாடுகள், குறைபாடுகள் இருந்தன. மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வாதிட்டார்.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: இருவரும், பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக ஒரே தன்மையுடைய குற்றம் செய்துள்ளனர். தனித்தனியாக செய்த செயல்களால் சிறுமி பாதிக்கப்பட்டார். ஒரே விசாரணை நடந்ததால், குற்றவாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
பாலியல் குற்ற வழக்குகளில், மற்றொரு குற்றவாளிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரே விசாரணையை நடத்த முடியும். விசாரணை நீதிமன்றத்தில் ஒரே விசாரணை நடந்தபோது, மனுதாரர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விசாரணையை இரண்டாக பிரித்து நடத்தினால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இருவரும் ஒரே காலகட்டத்தில், ஒன்றன்பின் ஒன்றாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
எனவே, விசாரணை நீதிமன்றம் சட்டப்படி ஒரே மாதிரியான கேள்விகளை இருவருக்கும் சரியாக முன்வைத்துள்ளது. இது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்கும் என கூற முடியாது.
தனித்தனி குற்றங்களுக்கு, தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும். சேர்த்து விசாரித்ததால் மனுதாரருக்கு பாதகமாக முடிந்தது என அவரது தரப்பு கூறுகிறது. இது ஏற்புடையதல்ல.
இரு சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டவர் ஒரே நபர் தான். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் அல்ல. இருவரும் பாதிக்கப்பட்ட நபரின் சூழ்நிலையை பயன்படுத்தி, ஒன்றன்பின் ஒன்றாக குற்றம் புரிந்துள்ளனர்.
நீதிமன்றங்கள் குழந்தையின் நலனை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை பயன்படுத்த வேண்டும். குற்றம் புரிந்தவரின் நலனைவிட குழந்தையின் நலனே முக்கியமானது. நீதிமன்றத்தின் அணுகுமுறை குழந்தைகளை மையமாக கொண்டிருக்க வேண்டும்.
இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வாய்ப்பும் மறுக்கப்படவில்லை. விசாரணை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

