/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை மாணவர் சேர்க்கை மையம் மீண்டும் தனியாருக்கு தாரைவார்ப்பு * 'பொறுப்பு' அதிகாரிகள் தன்னிச்சை முடிவால் சர்ச்சை
/
மதுரை காமராஜ் பல்கலை மாணவர் சேர்க்கை மையம் மீண்டும் தனியாருக்கு தாரைவார்ப்பு * 'பொறுப்பு' அதிகாரிகள் தன்னிச்சை முடிவால் சர்ச்சை
மதுரை காமராஜ் பல்கலை மாணவர் சேர்க்கை மையம் மீண்டும் தனியாருக்கு தாரைவார்ப்பு * 'பொறுப்பு' அதிகாரிகள் தன்னிச்சை முடிவால் சர்ச்சை
மதுரை காமராஜ் பல்கலை மாணவர் சேர்க்கை மையம் மீண்டும் தனியாருக்கு தாரைவார்ப்பு * 'பொறுப்பு' அதிகாரிகள் தன்னிச்சை முடிவால் சர்ச்சை
ADDED : பிப் 07, 2025 03:56 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் மாணவர் சேர்க்கை மையங்களை மீண்டும் தனியாருக்கு தாரைவார்ப்பது துவங்கியுள்ளது. எவ்வித அறிவிப்பும் இன்றி 13 சேர்க்கை மையங்களை தனியார் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பல்கலையில் தற்போது துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. 'பல்கலை அரசியல்' காரணமாக பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் என முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய உயர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். துணைவேந்தர் இல்லாத நிலையில் அரசு அமைத்துள்ள கன்வீனர் குழு தலைவர் சுந்தரவள்ளி(கல்லுாரி கல்வி கமிஷனர்) எப்போதாவது பல்கலைக்கு வருவதால் நிர்வாக ரீதியான கண்காணிப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
உச்ச பதவிகள் காலியாக இருப்பதால் பல்கலையின் நிதி நெருக்கடி பூதாகரமாக மாறியுள்ளது. இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவது பெரும் சவாலாக உள்ளது. தற்போது இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லை.
திறமையில்லாத நிர்வாகம், வருவாயை பெருக்கும் திட்டங்கள் இல்லாததே நிதி நெருக்கடிக்கு காரணம். ஒரு பல்கலையின் பிரதான வருவாய் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் இருந்து தான் கிடைக்கும். ஆனால் இப்பல்கலையில் தொலைநிலைக் கல்வியில் பல ஆண்டுகளாக அவ்வப்போது எழுந்த முறைகேடு புகார்கள், மாணவர்களுக்கு சரியாக டிகிரி சான்றிதழ் வழங்காதது, தேர்வு சரியான நேரத்திற்கு நடத்தாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால் லட்சக்கணக்கில் இருந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தற்போது சில ஆயிரமாக குறைந்துவிட்டது. இதனால் தொலைநிலைக் கல்வி வருவாய் சுருங்கிவிட்டது.
தனியாருக்கு 'கமிஷன்'
இந்நிலையில் பல்கலையை மேலும் பலவீனமாக்கும் வகையில் பல்கலை நடத்திவந்த மாணவர் சேர்க்கை மையங்களை 'கமிஷன்' அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதையும் தாண்டி பல்கலை ஆன்லைனில் சேர்க்கையாகும் மாணவர்களின் எண்ணிக்கை தனியார் மையங்கள் பெயர்களின் காண்பிக்கப்பட்டு கமிஷன் ஒதுக்கீடு செய்வதாகவும், இதனால் சம்பளம் வழங்க முடியாத பல்கலைக்கு வருவாய் இழப்பை சிலர் ஏற்படுத்தியுள்ளனர் என பேராசிரியர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே தனியாருக்கு சேர்க்கை மையங்கள் தாரைவார்க்கப்பட்டதில் ரூ.பல லட்சம் வசூலிக்க முடியாமல் பல்கலைக்கு இழப்பு ஏற்பட்டது. இன்று வரை வசூலிக்கவில்லை. இதனால் பல்கலையே சேர்க்கை மையங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு பல்கலை அலுவலர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டனர். மாணவர் சேர்க்கை ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் முறைகேடு குறைந்திருந்தது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எனக் கூறி தனியார் சேர்க்கை மையங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 65:35 விகிதம் அடிப்படையில் பல்கலை, தனியார் மையங்கள் கட்டணங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பல்கலை அருகில் மையம் ஏன்
பல்கலையில் இருந்து 25 முதல் 30 கிலோ மீட்டருக்கு தொலைவில் தான் சேர்க்கை மையம் அமைய வேண்டும். ஆனால் பல்கலையில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் உள்ள ஒரு கல்லுாரிக்கு சேர்க்கை மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலை மாணவர் சேர்க்கை மையம் சரியாக செயல்படுவதில்லை. இதன் மூலம் பல்கலையே தனியார் சேர்க்கை மையத்திற்கு மாணவர்கள் செல்ல மறைமுகமாக ஊக்குவிப்பதாக சர்ச்சை உள்ளது.
விசாரணை வேண்டும்
மாணவர் சேர்க்கை ஆன்லைன் ஆக்கப்பட்ட நிலையில் தனியார் மையங்களை ஏன் ஊக்கவிக்க வேண்டும். கடந்த கல்வியாண்டு('24 ஏஒய்') சேர்க்கையில் 13 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 4 ஆயிரம் வரை பல்கலை மூலமாகவும், 9 ஆயிரம் வரை தனியார் மையங்கள் மூலமாகவும் சேர்க்கையாகியுள்ளது. தனியார் சேர்க்கை மையங்களுக்கு தனியாக அட்மிஷன் கோடு எண் வழங்காதபோது அவர்கள் மூலம் எவ்வாறு அட்மிஷன் நடந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
பல்கலை மூலம் சேர்க்கையான மாணவர்களை கமிஷனுக்காக, தனியார் மையங்கள் மூலமாக சேர்க்கையானதாக காண்பித்து முறைகேடு நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பல்கலை அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உயர்கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றனர்.

