/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிச.5 முதல் 7 வரை மதுரை கம்பன் கழக விழா
/
டிச.5 முதல் 7 வரை மதுரை கம்பன் கழக விழா
ADDED : டிச 03, 2025 06:37 AM
மதுரை: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளையின் ஆண்டு விழா, அவ்வை -பாரதி விழா ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் டிச. 5 முதல் 7 வரை நடக்கிறது.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் முதல் நாள் விழாவில் மாலை 5:30 மணிக்கு பேராசிரியர் பத்மலட்சுமி சீத்தாராமன் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார். கழகம் நடத்திய சான்றிதழ் வகுப்பு, பேச்சு, இசை, கட்டுரை, ஒப்புவித்தல், ஓவியப் போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பரிசு வழங்குகிறார். 'கம்பனில் பல்சுவை' நுாலின் முதல் பிரதியை தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜர் வெளியிட, 'பபாசி' நிர்வாகி சேது சொக்கலிங்கம் பெறுகிறார்.
இரண்டாம் நாள் அவ்வை -பாரதி விழாவில் மாலை 5:00 மணிக்கு மதுரைக் கல்லுாரி வாரியம் நடனகோபால் தலைமையில், அக்கல்லுாரி முதல்வர் சுரேஷ் 'அவ்வை மொழி' எனும் தலைப்பில் பேச உள்ளார். பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி 'பாரதியின் நினைவுகள்' தலைப்பில் பேசுகிறார். இரவு 7:00 மணிக்கு பாலா நந்தகுமார் குழுவினர் வஞ்சமகள் சூர்ப்பனகை நாட்டிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். மூன்றாம் நாள் காலை 10:00 மணிக்கு 'கவிதை இன்பம் பெரிதும் வெளிப்படுவது சிலப்பதிகாரத்திலா இல்லை கம்பராமாயணத்திலா' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் நடுவராக பங்கேற்கிறார்.
மாலையில் பார்வையற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா கல்வி உதவித்தொகை வழங்குகிறார். இதைதொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்கும் 'உறவுகளை பெரிதும் போற்றியோர் இலங்கையரே, அயோத்தியரே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
ஏற்பாடுகளை தலைவர் சங்கரசீத்தாராமன், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் சொ.சொ.மீ. சுந்தரம் செய்து வருகின்றனர்.

