/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் தொடங்கி வைத்த பின் பிரச்னை வரக்கூடாது குடிநீர் திட்ட ஆய்வில் டி.எம்.ஏ., கறார்
/
முதல்வர் தொடங்கி வைத்த பின் பிரச்னை வரக்கூடாது குடிநீர் திட்ட ஆய்வில் டி.எம்.ஏ., கறார்
முதல்வர் தொடங்கி வைத்த பின் பிரச்னை வரக்கூடாது குடிநீர் திட்ட ஆய்வில் டி.எம்.ஏ., கறார்
முதல்வர் தொடங்கி வைத்த பின் பிரச்னை வரக்கூடாது குடிநீர் திட்ட ஆய்வில் டி.எம்.ஏ., கறார்
ADDED : டிச 03, 2025 06:37 AM
மதுரை: 'மதுரையில் டிச. 7ல் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின் அத்திட்டத்தில் எவ்வித பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர் (டி.எம்.ஏ.,) மதுசூதனன் ரெட்டி தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் 24 மணிநேரமும் வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வினியோகிக்க ரூ. 2070.69 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவுபெற உள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட வார்டுகளில் குழாய் வழியாக குடிநீர் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மதுரையில் 1.67 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டம் வழங்கும் விழா டிச.7 உத்தங்குடியில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பெரியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி டி.எம்.ஏ., மதுசூதனன் ரெட்டி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முதல் மதுரை வரை குடிநீர்த் திட்ட வழித்தடங்களில் குழாய்ப் பதிப்பு, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இதன் பின் அவரது தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கமிஷனர் சித்ரா, தலைமை பொறியாளர் பாபு, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி பங்கேற்றனர்.
மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட திட்ட அறிக்கையும், நேரடி ஆய்விலும் சில முரண்பாடுகள் உள்ளன. சோதனை வினியோகத்தில் அழுத்தம் தாங்காமல் ஏற்படும் நீர்க்சிவு பிரச்னைகள் அடுத்தடுத்து ஒரே இடத்தில் நிகழ்ந்துள்ளன. இன்னும் வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய 6 ஆயிரத்திற்கும் மேலான இணைப்புகளை விரைவில் கொடுத்து முடிக்க வேண்டும். பல இடங்களில் குழாய் இணைப்புகள் கொடுத்த பின் ரோடுகளை தோண்டியதால் சேதமடைந்துள்ளன. முதல்வர் தொடங்கி வைத்த பின் எவ்வித பிரச்னையும் குடிநீர் திட்டத்தில் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என டி.எம்.ஏ., அறிவுறுத்தினார் என்றனர்.

