/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு தேவை நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம்
/
மதுரைக்கு தேவை நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம்
ADDED : அக் 27, 2024 04:25 AM
மதுரை : நாள்பட்ட நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இறுதிகட்ட நிலையில் உள்ள தென்மாவட்ட நோயாளிகளுக்காக மதுரை தோப்பூரில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றில் 75 சதவீதம் பேரில், நுரையீரலின் காற்றுப்பை சுவர்கள் தடிமனாகும் நோய் (ஐ.எல்.டி,.) வந்தவர்கள் ஒரு சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்கள் நுரையீரல் பாதிப்பு வந்து சிகிச்சை முடிந்த பின்னும் தொடர் பாதிப்பை சந்திப்பவர்கள். காற்றுப்பைகளின் சுவர் மெல்லிதாக இருந்தால் மட்டுமே எளிதாக சுவாசிக்க முடியும். சுவர் தடிமனானால் மூச்சுவிட சிரமப்படுவர்.
காசநோய் (டி.பி.), புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நாள்பட்ட நுரையீரல் (சி.ஓ.பி.டி.,) பிரச்னை இருக்கும்.
இந்த நோயாளிகளுக்கான சிகிச்சையின் தேவை அதிகரித்து வருகிறது. இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு சிகிச்சை மையம் தென்மாவட்டங்களில் இல்லை.
மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் வார்டில் தினமும் 180 முதல் 200 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 10 முதல் 20 பேர் குழந்தைகள். குழந்தைகளுக்கு சி.ஓ.பி.டி., நோய் வராது. ஐ.எல்.டி., சி.ஓ.பி.டி., நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தன்மை அதிகரித்துக் கொண்டே செல்லும்.
குடிபோதை, சிகரெட் புகைப்பவர்கள், காசேநாயாளிகள் (டி.பி.) மோசமான நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். சிகிச்சை அளித்தாலும் சேதமடைந்த நுரையீரலை 100 சதவீதம் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாது.
சேதத்தின் அளவைப் பொறுத்து சிலர் மூச்சு வாங்கிக் கொண்டே நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
இவர்களுக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் தேவைப்படும். அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை, நுரையீரலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும் வார்டுகளில் இடப்பற்றாக்குறையால் மாதக்கணக்கில் தங்க வைப்பது இயலாத காரியம்.
90 சதவீத நோயாளிகளுக்கு நாளுக்கு நாள் நோயின் தன்மை அதிகரிப்பதால் ஆக்சிஜன் இல்லாமல் நடமாட முடியாது. வீட்டில் படுக்கையறையில் 24 மணி நேரமும் இளைத்துக் கொண்டே இருப்பது வேதனையானது. கழிப்பறைக்கு கூட தனியாக செல்ல முடியாது.
வீட்டிலேயே ஆக்சிஜன் வழங்குவற்கான கருவிகளை நிறுவுவது ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு இயலாத விஷயம். எனவே இருக்கும் காலம் வரை தானாக எழுந்து கழிப்பறை செல்வது போன்ற சிறிய வேலைகளை சுயமாக செய்ய வைப்பதே சிறப்பு சிகிச்சை மையத்தின் நோக்கம்.
மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் கடைசிகட்ட புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது.
உறவினர்கள் இல்லாத நிலையில் மருத்துவமனை பணியாளர்களே நோயாளிகளின் இறுதிகட்டம் வரை கவனித்துக் கொள்கின்றனர்.
அதேபோல தோப்பூரில் நுரையீரல் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்க வேண்டும்.
இதில் நோயாளிகளுக்கான வீல்சேர்கள், சரிவு படிக்கட்டுகள், மத்திய ஆக்சிஜன் யூனிட் வசதி அமைக்க வேண்டும்.
இதன் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்த முடியும் என்பதால் தமிழக அரசு கருணை காட்ட வேண்டும் என்றனர்.