தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெல் கொள்முதல் மையத்தில் நிர்ணயித்த தொகைக்கு மேல் கமிஷன் தராதீங்க: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் 'பளிச்'

நெல் கொள்முதல் மையத்தில் நிர்ணயித்த தொகைக்கு மேல் கமிஷன் தராதீங்க: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் 'பளிச்'

நெல் கொள்முதல் மையத்தில் நிர்ணயித்த தொகைக்கு மேல் கமிஷன் தராதீங்க: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் 'பளிச்'


ADDED : ஜூலை 11, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (டி.என்.சி.எஸ்.சி.,) நெல் கொள்முதல் மையங்களில் (டி.பி.சி.,) சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு மூடைக்கு ரூ.10 என அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் கமிஷன் தரவேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நெல் கொள்முதல் மையங்களில் மூடைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை மைய அலுவலர்கள் கமிஷன் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் இப்பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.என்.சி.எஸ்.சி., பொது, தரக்கட்டுப்பாட்டு மண்டல மேலாளர்கள் சுகி பிரேமலா, மணிகண்டன், கலெக்டரின் பி.ஏ., (விவசாயம்) சாந்தி கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பேசியதாவது: மூடைக்கு ரூ.40 முதல் ரூ.60 என கிளார்க்குகள் வசூலிக்கின்றனர். அரசு கூடுதல் சம்பளம் வழங்கினால் வசூலிக்க மாட்டார்கள். 40 கிலோ எடை கொண்ட மூடையை எடை மெஷினில் வைக்கும் போது கூடுதலாக ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். மூடை எடைபோட்ட பின்னும் சில மையங்களில் வாளியில் இரண்டு மூன்று முறை அள்ளி தனியாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

தாமதமாக திறப்பு விவசாயிகள் நெல்லை அறுவடை செய்த பின் 2 வாரம் வரை மையம் திறப்பதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மழை வந்தால் தார்ப்பாய் முழுமையாக மூடமுடியாமல் மழையில் நெல் நனைந்து முளைக்கிறது. எடையிட்டு ரசீது வழங்குவதற்கு முன்பாக நெல்மூடைகள் நனைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம்.

மத்திய அரசின் என்.சி.சி.எப்., நிறுவனத்திடம் நெல்லை விற்ற 70 விவசாயிகளுக்கு தற்போது வரை பணம் வரவில்லை. எனவே மதுரையில் இனிமேல் என்.சி.சி.எப்., நிறுவனத்திற்கு கலெக்டர் அனுமதி அளிக்கக்கூடாது. செல்லம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் முப்போகம் விளைவதால் நிரந்தர கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.

அரசு ஒப்பந்த வாகனங்களில் தான் நெல் மூடைகளை ஏற்ற வேண்டும். வியாபாரிகளின் நெல்லை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். லாரிகள் வராமல் நெல்லை எடையிட அலுவலர்கள் மறுக்கின்றனர். எடையிட்ட பின் லாரிகளில் மூடைகள் ஏற்றாவிட்டாலும் அடுத்து நெல்லை எடையிட மறுக்கின்றனர்.

மதுரை விவசாயிகளின் நெல்லை பாதுகாப்பு கிட்டங்கிகளில் சேகரித்த பிறகு இடமிருந்தால் மட்டுமே பிற மாவட்ட விவசாயிகளின் நெல்லை கொண்டு வரவேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பேசியதாவது: இதுவரை இல்லாத அளவு 2025 - 26ல் 166 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் ரூ.350 கோடி மதிப்புள்ள மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் டன் நெல் பெறப்பட்டுள்ளது. கப்பலுார் தவிர கூடுதலாக இரண்டு இடங்கள் நெல்லை சேமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களைப் போல மதுரைக்கு நிரந்தர கொள்முதல் மையம் அமைக்க வாய்ப்பில்லை. மழையை எதிர்பார்த்து ஒவ்வொரு மையத்திற்கும் 6 தார்ப்பாய்கள் கொண்டு செல்ல மைய உறுப்பினர்களிடம் உறுதிபடுத்துகிறோம்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தான் மதுரையில் இருந்து டி.பி.சி.,க்கு ஆட்களை தேர்வு செய்யமுடியவில்லை. நெல் கொள்முதல் மையங்களை அரசு தான் நடத்துகிறது. எனவே அரசு நிர்ணயித்த மூடைக்கு ரூ.10 தொகையைத் தவிர கூடுதலாக பணம் கொடுத்து கமிஷனை ஊக்கப்படுத்தாதீர்கள் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us