/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஒரே நாளில் கட்சி - கவுன்சில் கூட்டம் முதல்வர் வரவுள்ள நிலையில் மா.செ.,க்கள் - மேயர் மோதலா
/
மதுரையில் ஒரே நாளில் கட்சி - கவுன்சில் கூட்டம் முதல்வர் வரவுள்ள நிலையில் மா.செ.,க்கள் - மேயர் மோதலா
மதுரையில் ஒரே நாளில் கட்சி - கவுன்சில் கூட்டம் முதல்வர் வரவுள்ள நிலையில் மா.செ.,க்கள் - மேயர் மோதலா
மதுரையில் ஒரே நாளில் கட்சி - கவுன்சில் கூட்டம் முதல்வர் வரவுள்ள நிலையில் மா.செ.,க்கள் - மேயர் மோதலா
ADDED : மே 25, 2025 04:38 AM

மதுரை : மதுரையில் முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) ஏற்பாடு செய்த செயல்வீரர்கள் கூட்டமும், மாநகராட்சி மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டமும் ஒரே நாள், நேரத்தில் நடந்ததன் மூலம் மா.செ.,க்கள் - மேயருக்கு இடையே உள்ள உட்கட்சி புகைச்சல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன், மேயர் (அமைச்சர் தியாகராஜன்) ஆதரவாளர்களாக பிரிந்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரையில் ரோடு ேஷா நிகழ்ச்சி, ஜூன் 1ல் தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை 3 மாவட்ட செயலாளர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் நடத்தினர். அமைச்சர் தியாகராஜனும் பங்கேற்றார். ஆனால் அதேநேரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமும் நடந்தது.
இதனால் 95 சதவீதம் தி.மு.க., கவுன்சிலர்கள் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பங்கேற்க சென்றுவிட்டனர். கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கான கோரம் இல்லாத சூழல் ஏற்பட்டது. தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்காதது குறித்து அ.தி.மு.க., -மார்க். கம்யூ., கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் கூட்டத்தை மேயர் நடத்தினார்.
இதுகுறித்து அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: மேயர் - தி.மு.க., மாவட்ட செயலாளர்களுக்குள் உள்ள மோதல் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தின் போது நகர் செயலாளர் தளபதியும் இதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தி கவுன்சிலர்களை பங்கேற்க செய்ய விடாமல் தடுத்தார். தற்போது கவுன்சில் கூட்டம் நாளில் கட்சிக் கூட்டம் நடத்தி மக்கள் பிரச்னையை பேச விடாமல் மா.செ.,க்கள் செய்கின்றனர் என்றார்.
தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: மேயர், கவுன்சிலர் பதவிகள் கட்சி மூலம் தான் கிடைத்தது. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய கூட்டம் இது. கட்சி ரீதியாக மா.செ.,க்கு கட்டுப்பட்டவர்கள் தான் மேயர், கவுன்சிலர்கள். கட்சிக் கூட்டம் மே 23 அல்லது 28 ல் நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் ரோடு ேஷா நிகழ்ச்சி முடிவு செய்யப்பட்டதால் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டது.
இதுகுறித்து மேயர் தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளில், ஒரு மணிநேரம் தாமதமாக கூட கவுன்சில் கூட்டத்தை மேயர் நடத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் நடத்தியதால் தேவையில்லாத சர்ச்சை எழுந்துள்ளது என்றனர்.