ADDED : மே 03, 2025 05:07 AM

அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு, திருக்கண் மண்டகப் படிகள், எதிர்சேவை நடைபெறும் ரோடுகளில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணி நடக்கிறது.
கள்ளழகர் பல்லக்கில் அழகர்கோவில் மெயின்ரோட்டில் உள்ள மண்டகப் படிகளிலும் எழுந்தருள்வார். மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். இதற்காக கள்ளழகர் வரும் ரோடு, எழுந்தருளும் மண்டகப்படிகளைச் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
அப்பன் திருப்பதி முதல் கொடிக்குளம் வரை ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கிறது. பிரஷ் கட்டர் இயந்திரம் மூலமாக புற்கள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய செடிகள் வாகனங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு, இருபுற ஓரங்களிலும் உள்ள தடுப்புச்சுவர்களில் வண்ணம் அடிக்கப்படுகிறது.
ரோட்டோரம் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை மாநகராட்சி விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுத்தமான நீரில் மட்டுமே கள்ளழகருக்கு தீர்த்தவாரி
அழகர்கோவில் சித்திரை திருவிழா மே 8 முதல் மே 17 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 12ல் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.
அன்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக கள்ளழகர் மீதும், பக்தர்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சுவது பாரம்பரியம். இதற்காகவே ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கும். பக்தர்கள் அதிக திறனுடைய 'பிரஷர் பம்பு'களை பயன்படுத்தக் கூடாது. தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி மட்டுமே தண்ணீரை பீய்ச்ச வேண்டும்.
வேதிப்பொருட்கள், திரவியங்கள் எதுவும் கலக்காமல் சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.