/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுலா பட்டியலில் மதுரையை சேர்க்கணும்
/
சுற்றுலா பட்டியலில் மதுரையை சேர்க்கணும்
ADDED : ஜூலை 27, 2025 04:15 AM
மதுரை:'ஏசியான்' நாடுகளுடனான தாராள விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள 18 இந்திய சுற்றுலா நகரங்களுடன் மதுரையை சேர்க்க வேண்டும் என அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புரூனே, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுடன் 'பாஷா' எனப்படும் இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவை ஒப்பந்தம் இல்லாமலேயே தாராள விமானப் போக்குவரத்து நடைபெற மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. அதில் இந்தியா சார்பில் 18 இந்திய சுற்றுலா நகரங்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மதுரை விமான நிலையத்தை முதன்மைபடுத்தி மீனாட்சியம்மன் கோயில், கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு எளிதில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியும். எனவே மதுரையையும் சுற்றுலா நகர பட்டியலில் சேர்த்தால் தென் தமிழகம் தொழில் பொருளாதார வளர்ச்சி பெறும். விமான சேவைகளும் அதிகரிக்கும் என்றார்.