/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காத்திருப்போர் அறையில் குளிரவில்லை மதுரை ரயில் பயணிகள் அவதி
/
காத்திருப்போர் அறையில் குளிரவில்லை மதுரை ரயில் பயணிகள் அவதி
காத்திருப்போர் அறையில் குளிரவில்லை மதுரை ரயில் பயணிகள் அவதி
காத்திருப்போர் அறையில் குளிரவில்லை மதுரை ரயில் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 03, 2025 03:32 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இயங்கும் கட்டண குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறையில் ஏ.சி.,களை இயக்காமல் மின்விசிறிகளை இயக்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஸ்டேஷனின் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் வசதிக்காக கட்டண குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை செயல்படுகிறது. உள்ளே நுழைந்ததும் ரயில் டிக்கெட் அல்லது ஆதார் அட்டையை காண்பித்தால் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.
நபர் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 கட்டணம். நேரம் முடிந்து ஒரு நிமிடம் அதிகமானாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணமில்லை. வெளியேறும் பயணிகள் நுழைவுச் சீட்டை வழங்கி அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில் நுாறு பேர் அமரும் வகையில் குஷன் சீட்டுகள், சோபா, 'டிவி', அலைபேசி சார்ஜிங் வசதிகள், தீயணைப்புக் கருவி, 'சிசிடிவி' உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள், குடிநீர், சானிட்டரி நாப்கின்கள், கழிப்பறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பயணிகள் குறிப்பாக பகல் நேரத்தில் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றனர்.
ரயில்வே நிர்வாகம் இதன் செயல்பாட்டை ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துள்ளது. அவர்கள் அறையில் ஏ.சி.,களை சரிவர இயக்காமல் மின்விசிறிகளை ஓடவிடுவதால் 'குளிரூட்டப்பட்ட அறையாக இருந்தும் குளிரவில்லை' என பயணிகள் புலம்பிச் செல்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: அறையில் 'ரிசப்ஷன்' அருகே 2 ஏ.சி., பக்கவாட்டில் ஒரு ஏ.சி., பின்னால் 2 ஏ.சி., என 5 ஏ.சி.,கள் உள்ளன. அவற்றில் 3 ஏ.சி.,கள் மட்டுமே வேலை செய்கின்றன. பின்னால் இருக்கும் இரு ஏ.சி.,களை அணைத்து வைத்து மின் விசிறிகளை ஓட விடுகின்றனர். சமயங்களில் மின்விசிறியும் இயங்குவதில்லை. ஏ.சி., அறைகளில் மின்விசிறிகளை இயக்கக் கூடாது. இதனால் 3 ஏ.சி.,கள் இயங்கியும் போதிய குளிர் இன்றி பயணிகள் தங்கள் கைகளில் கிடைத்தவற்றைக் கொண்டு வீசும் நிலையுள்ளது.
ஆட்கள் இல்லாததால் ஏ.சி.,களை அணைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒரு மணி நேரம் காத்திருக்க ரூ.20 வசூலிக்கின்றனர்.
அறை நிரம்பியுள்ளதா இல்லையா என கண்காணித்து ஏ.சி.,களை இயக்குவதே அவர்களின் கடமை. கழிப்பறையில் சில நேரங்களில் தண்ணீர் வருவதில்லை என்றனர்.