/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை
/
மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை
மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை
மதுரையின் இருபோக பாசன பரப்பை அளவிட்டு மறுசீரமைப்பு செய்யணும்: பாலமேடு, அலங்காநல்லுாருக்கு கால்வாய் தேவை
ADDED : அக் 25, 2025 04:33 AM

மதுரை: முல்லைப்பெரியாறு, வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் திருமங்கலம் பிரதான கால்வாய்களின் மூலம் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ள நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நகர்மயமாதல் அதிகரித்துள்ளதால் பாசனப்பரப்பை மறுசீரமைப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கருக்கு இருபோக சாகுபடியும் மேலுார், திருமங்கலம் பகுதிகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசனத்தையம் நம்பியுள்ளன. உசிலம்பட்டி பகுதி மானாவாரி என்பதால் அப்பகுதி விவசாயிகள் போராடி 58ம் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தனர். இப்போது வைகை அணை நிரம்பும் நிலையில் உசிலம்பட்டி, நிலக்கோட்டை சேர்த்து 35 கண்மாய்களுக்கு ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
எல்லா வயல்களையும் பாசனத் தண்ணீரோடு இணைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. அந்த வகையில் பாசனமில்லாத எஞ்சிய பகுதிகள் என்றால் மதுரையில் பாலமேடு, அலங்காநல்லுார் தெற்குப்பகுதி தான். அதாவது சிறுமலைக்கும் முல்லைப்பெரியாறு பாசனத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. செம்மனிப்பட்டி வரை பாசனத்தண்ணீர் கிடையாது. கிட்டத்தட்ட 6000 ஏக்கர் நிலங்கள் மானாவாரியிலும் சாத்தையாறு அணையின் கீழும் உள்ளன என்கின்றனர் விவசாயிகள்.
கிடப்பில் சர்வே திட்டம் அவர்கள் கூறியதாவது:
அணைப்பட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து நிலக்கோட்டை வழியாக வாடிப்பட்டியின் வடபுறம் மலையடிவாரம் வழியாக கொண்டு வந்து வாடிப்பட்டி, செம்மினிபட்டி, சாத்தையாறு அணை நீர்வரத்துடன் சேர்ப்பதற்கு தமிழக அரசு ஆய்வு செய்தது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் பாலமேடு முழுவதும் பாசனப்பகுதியாக மாறிவிடும். இதை ஏற்கனவே பலமுறை சர்வே செய்யப்பட்டும் திட்டம் கிடப்பில் உள்ளது. மானாவாரி கண்மாய்கள் பயன்பெறும் உசிலம்பட்டி 58 ம் கால்வாய் வெட்டியதைப் போல பாலமேடு, அலங்காநல்லுாருக்கும் கால்வாய் வெட்டவேண்டும்.
மறுசீரமைப்பு அவசியம் மதுரை நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஆனையூர், ஊமச்சிகுளம், திருப்பாலை, கருப்பாயூரணி, தாமரைப்பட்டி, தண்டலை, குலமங்கலம் பகுதி இருபோக சாகுபடி நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது அதிகரித்துள்ளது. பாசனப்பரப்பு சுருங்கி விட்டதால் இப்பகுதிகளுக்கு பாசனத்தண்ணீர் விடுவது வீணாகிறது. இதனால் விவசாயம் எங்கு நடக்கிறதோ அங்கு தண்ணீரை மடைமாற்றம் செய்ய வேண்டும் எனில் முதலில் பாசனப்பரப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாசனப்பரப்பு, பாசன கால்வாய் ஆகியவற்றை சர்வே எடுத்து உண்மையான பாசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழிகாட்ட வேண்டும் என்றனர்.

