ADDED : ஆக 29, 2025 03:47 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 15ல் துவங்கிய மண்டல பூஜையில் கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், மூலவர் முருகப்பெருமான் கரத்தில் உள்ள தங்கவேலுக்கு வெள்ளிக் குடங்களில் புனித நீரை நிரப்பி பூஜை, தீபாராதனை நடந்தது.
பின்பு வெள்ளிக் குடங்கள் மூலவர்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உற்ஸவர்கள் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த மண்டல பூஜை ஆக. 26ல் நிறைவு பெற்று, நேற்று முன்தினம் மண்டலாபிஷேக முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது.
யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கச் சப்பரத்தில் தங்கக் குடம், விநாயகருக்கு தங்க அம்பாரியில் தங்கக்குடம், சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி சிம்மாசனங்களில் வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது.
நேற்று காலை 2 ம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனமாகி மகா பூர்ணாஹுதி, தீபாராதனை முடிந்து புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகியது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல், கற்பக விநாயகர் சதுர்த்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. வள்ளி, தெய்வானை, சண்முகர், உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு புனித நீர் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
ஜூலை 13 ல் மூலவர்கள், உற்ஸவர்கள் கரங்களில் கட்டப்பட்ட காப்பு நேற்று கழற்றப்பட்டது. யாகசாலை பூஜையின் போது வேத சிவாகம திருமுறை பாராயணங்கள் நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மை தேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, பேஷ்கார்கள் நெடுஞ்செழியன், புகழேந்தி பங்கேற்றனர்.