/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
/
இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
இனி எல்லாம் சுகமாகட்டும்... 2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
ADDED : டிச 31, 2024 04:54 AM

அரசு அறிவித்தால் மகிழ்வோம்
எஸ்.கல்யாணசுந்தரம், பொருளாளர், அரசு ஊழியர்கள் சங்கம்: இந்த ஆண்டு எங்களுக்கு ஏமாற்றமான ஆண்டாகத்தான் கழிந்தது. காரணம், அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல்கால வாக்குறுதிகள், அறிவிப்புகள் எதுவும் நிறைவேறவில்லை. இதனால் எல்லோருக்கும் ஏமாற்றமே. தனிப்பட்ட முறையிலும் பணபலன்கள் கிடைக்காதது, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. இந்நிலை 2025 புதிய ஆண்டிலாவது மாறும் என எதிர்பார்க்கிறேன். முடக்கப்பட்ட சலுகைகள், புதிய பென்ஷன் ரத்து போன்ற அறிவிப்புகள் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்களைப் போன்றோரின் இல்லங்களில் ஒளிவிளக்கு ஏற்றப்படும். அத்துடன் அரசு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, சரண்டர் விடுப்பு கிடைப்பது போன்றவையும் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன்.
உறவுகளை பலப்படுத்துவேன்
எஸ்.பாஸ்கரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், டி.கல்லுப்பட்டி: கடந்த ஓராண்டில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததுடன், துயர சம்பவங்களும் நடந்ததால் சொல்லொணா துயரத்திற்கு ஆளானேன். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தவை கிடைக்காததால் ஓய்வூதியர்களான நாங்களும் பாதிக்கப்பட்டோம். எனது தனிப்பட்ட வாழ்விலும் வேதனைக்குரியதாக இருந்தது. எனக்கு நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்த 3 ஆசிரியர்கள் மறைந்தது மிகுந்த வேதனையை தந்தது. இதுபோன்ற ஆண்டு இனி வரக்கூடாது. புதிய ஆண்டில் நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புதிய நண்பர்கள், உறவினர்களை தேடிச்சென்று உறவை பலப்படுத்தவும் எண்ணியுள்ளேன். ஓய்வூதியர்களுக்கும் இழந்த சலுகைகள் கிடைக்க வேண்டும். அரசு இந்தாண்டு அதை வழங்கும் என்று நம்புகிறேன்.
பணி சார்ந்து கற்றுக்கொண்டேன்
பேராசிரியர் ஜெனிபா, நாகமலை: 2024 துவங்கும்போதே அமோகமாக இருக்கும் என நினைத்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. நிறைய பயணங்கள் மேற்கொண்டேன். பணி சார்ந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஒருகட்டத்தில் சலிப்பும் சோர்வும் ஏற்பட்டது.இரண்டு, மூன்று மாதங்கள் கடினமாக இருந்தாலும் சுமூகமாக அவற்றை கடந்ததை சாதனையாக பார்க்கிறேன். பெண்கள் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றேன். இந்தாண்டு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. 2025ம் ஆண்டை புத்துணர்வுடன் எதிர்நோக்கியுள்ளேன். பணி சார்ந்து மேன்மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் 20 ஆண்டுகள் ஓடுவதற்கான உத்வேகம் கிடைத்துள்ளது.
மனதிற்கு நிறைவு
சமூக ஆர்வலர் சுப்புராம், எஸ்.எஸ்.காலனி: 2024ல் தினமலர் நாளிதழ் மூலம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுடன் இணைந்து பெட்கிராட் நிறுவனம் சார்பில் சுய தொழிலுக்கான பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.அவர்களில் 4800 பெண்கள்சுயதொழில் செய்கிறார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை காட்சிப்படுத்துகிறார்கள். அவர்களுடைய முழு முயற்சி, உழைப்பு, ஆர்வமுமே காரணம். ஒரு பெண் முன்னேறினால் குடும்பம் முன்னேறும். அதன் மூலம் சமூகமும், நாடும் முன்னேற்றம் அடையும். குறைந்தது 10 ஆயிரம் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி 2025ம் ஆண்டை எதிர்நோக்குகிறோம். இங்கு பயிற்சி பெற்றவர்கள் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மனதிற்கு நிறைவாக உள்ளது.
படிப்பினை கொடுத்த 2024
இயற்கை ஆர்வலர் சோழன்குபேந்திரன், கடச்சனேந்தல்: 12 ஆண்டுகளாக 'மரத்திற்குள் மதுரை' எனும் திட்டம் சார்ந்து மரக்கன்று நட்டு வருகிறேன். 2024ல் ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டது எனது வாழ்வில் ஒரு மைல்கல். அதற்கு உறுதுணையாக இருந்தது தினமலர் நாளிதழ். இந்தாண்டு 'மியாவாக்கி' முறையில் முதன்முறையாக மனிதனால் சிறிய காடு உருவாக்கப்பட்டது. அதிகளவிலான இயற்கை பேரிடர்களையும் சந்தித்தோம். வயநாடு நிலச்சரிவு, தென்மாவட்டங்களில் வெள்ளம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தின. 2024 பெரிய படிப்பினையை கொடுத்தது. மதுரையில் காடுகளின் பரப்பளவை 18 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக மாற்ற வேண்டும். 2025ல் மக்களுடன் இணைந்து குறைந்தபட்சம் 10 லட்சம் மரக்கன்றுகள், 100 குறுங்காடுகளை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு. பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புத்தாண்டில் தொழில் வளர்ச்சி
தொழிலதிபர் திருமுருகன், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு: 2024ல் பொருளாதார நெருக்கடி, சப்ளை சங்கிலி பிரச்னை தொழில்துறையை பெரிதும் பாதித்தன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் போராட்டங்களை சந்தித்தன. விலைவாசி உயர்வு அனைத்து துறைகளுக்கும் சவாலாக இருந்தது. எனினும் விவசாயம், தொழில்நுட்ப சேவை துறைகள் மூலம் வளர்ச்சியைக் கண்டன. 2025ல் தொழில்துறைக்கு ஒரு முன்னேற்ற திட்டம் தேவை. திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி, ஏ.ஐ., டிஜிட்டல் மாற்றங்களை உள்வாங்கி எம்.எஸ்.எம்.இ., துறையை மேம்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் திட்ட உதவிகளை அமல்படுத்த வேண்டும். ரோடு, ரயில், வணிக தளங்களை மேம்படுத்த வேண்டும். 2024ல் கற்ற பாடம் மூலம் 2025ல் சாதனை படைக்க வேண்டும். அதற்கு அரசும், தொழில்முனைவோரும் ஒருங்கிணைந்து முயற்சிகளைமேற்கொண்டால், நிச்சயம் தமிழகம் தொழில்துறையின் தலைசிறந்த மையமாக மாறும்.
நல்ல நண்பன் வேண்டும்
டாக்டர் -கயல்விழி, பீபிகுளம்: கடந்தாண்டு ஒரு ரோபோட்டிக் போல இயந்திர வாழ்க்கையாகவும், எனக்குள் இருந்த குழந்தைத்தனம் இல்லாமல் மன அழுத்ததுடனும் கடந்துசென்றது. புதிய ஆண்டில் எதிலும் ஒரு சலிப்புடன் இருந்த மனநிலை மாற எண்ணுகிறேன். வரப்போகும் 2025ம் ஆண்டு நல்லதுசெய்தால் திருப்பி நன்மையளிக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் நம்மை நம்பும் தோழியர் கிடைக்க வேண்டும். ஆண்டுமுழுவதும் மகிழ்வுடன் இருந்து அனைவரையும்மகிழ்விக்க விரும்புகிறேன்.
கடன் தீர்க்கும் ஆண்டாக இருக்கும்
கார்த்திக், விற்பனை பிரதிநிதி, மதுரை: 2024 மறக்க முடியாத ஆண்டு. ஏனெனில் இந்தாண்டுதான் புதிய வீடு வாங்கினேன். அதனால் நிறைய கடன்களும் வந்துவிட்டன. அதனால் வேலையிலும் சற்று சோர்வுடன்இருந்தேன். தொழிலில் விற்பனையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்பட்டேன். சோதனை மேல் சோதனையாக இருந்தது. ஜாதகப்படி இந்தாண்டு ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க காத்திருக்கிறேன். 2025 ஆண்டில் கடன்களை அடைத்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன்வரவேற்கிறேன்.
குழந்தையால் மகிழ்ந்த ஆண்டு
சரவணன், மார்க்கெட்டிங் பிரதிநிதி, செல்லுார்: எனக்கு இந்தாண்டு நிறைய கவலைகள் இருந்தன. அதேசமயம் எனக்கு குழந்தை பிறந்ததால் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. என்குழந்தையை துாக்கி கொஞ்சியதை என்றென்றும் நினைவுடன் வைத்திருப்பேன். பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவிலும் என்னை சந்தோஷப்படுத்தியகுடும்பத்துக்கு நன்றி. இந்தாண்டு குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். என்னால் முடிந்த உதவிகளைஅனைவருக்கும் செய்ய புதிய சபதம் எடுத்துள்ளேன்.
தேர்வில் வெற்றி வேண்டும்
ரஞ்சனா, கல்லுாரி மாணவி, மதுரை: இந்தாண்டில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு செல்வது, எப்படி படிப்பது என்பது போன்ற அனுபவத்தை தெரிந்துகொண்டேன். அதன்மூலம் என்னை மேம்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன். நண்பர்கள், ஆசிரியர்களிடம் பெற்ற அறிவுரைகளை மறக்கமுடியாது. வீட்டிலும் பல கஷ்டங்களும், மகிழ்ச்சிகரமான விஷயங்களும் நடந்தன. புதிய ஆண்டில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். என்னை சார்ந்தோர் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மனப்பக்குவம் பெற்றுள்ளேன்
தவுபிகா, கல்லுாரி மாணவி, மதுரை: 2024 கல்லுாரி வாழ்க்கையில் மூன்றாம் ஆண்டு. இறுதியாண்டு என்பதால் நண்பர்கள், ஆசிரியருடன் பேசும் நாட்கள் இனி குறைவாக இருக்கும் என்பதால் மனதுக்கு கஷ்டமாகஇருக்கிறது. அதேசமயம் கல்லுாரியில் சேர்ந்த முதலாம் ஆண்டில் இருந்த மனநிலை, இந்தாண்டு கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறது. மனதை பக்குவமான நிலைக்கு என்னை வளர்த்து கொண்டுள்ளேன். அதேசமயம் அடுத்து என்ன செய்வது, மேற்படிப்பு படிக்கலாமா, வேலைக்கு செல்லலாமா என்று பெரும் குழப்பத்துடன் புதிய ஆண்டை ஆரம்பிக்கிறேன். எதுவந்தாலும் எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக நம்புகிறேன்.
தொழில் முனைவோருக்கு சாதகமான ஆண்டு
கிருத்திகா, தொழில்முனைவோர், கூடல்நகர்: நான் 'நேச்சுரல் ஸ்கின்கேர்' குறித்த 'ஸ்டார்ட் அப்' தொழில் செய்து வருகிறேன். 2024 ம் ஆண்டு தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக இருந்தது. குறிப்பாக 'ஸ்டார்ட் அப்' தொழில்களுக்கான 'மார்க்கெட்டிங்' வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அதுபோல் துவக்க நிலையில் உள்ள தொழில்களுக்கு வளர்ச்சி தரும் ஆண்டாக 2025 பிறக்க வேண்டும். பெண் தொழில்முனைவோர் ஆர்வமாக வெளிவர தொடங்கியுள்ளனர். அவர்களை கை துாக்கிவிடும் சலுகைகளை அரசிடம் எதிர்பார்க்கிறோம். சிறிய தொழில்களுக்கு தற்போதைய நிலையில் 'இ காமர்ஸ் பிளாட்பார்ம்' மிக முக்கியம். ஆனால் அதற்கான செலவு அதிகம். ஆர்கானிக் பொருட்களின் சந்தை 2025ல் இன்னும் அதிகமாக விரிவடைய வேண்டும்.
வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும்
மீனா, பேராசிரியை, கடச்சனேந்தல்: தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகம் சந்தித்த ஆண்டாக 2024 நம்மை கடந்துள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கத்திற்கு பின் மாணவர்களையும், அலைபேசி பயன்பாட்டையும் பிரிக்க முடியாததாகிவிட்டது. அந்த வகையில் கடந்தாண்டு மாணவர் சமுதாயம் அலைபேசியை அதிகம் பயன்படுத்த நேர்ந்தது. குறிப்பாக ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது. இதுபோல் 2025ம் ஆண்டும் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுவர வேண்டும். கற்பித்தலில் இன்னும் அதிக தொழில்நுட்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கான வளர்ச்சியை காணும் ஆண்டாக விளங்க வேண்டும்.
ஆன்மிகம் பெருகணும்
கலைவாணி, குடும்ப தலைவி, நரிமேடு: இளைஞர்களிடம் 'பேஷன்' என்ற பெயரில் பாரம்பரியம், பண்பாடு, ஆன்மிகம் போன்ற மனித வாழ்க்கையை நெறிப்படுத்தம் விஷயங்கள் கேலியாக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தாக்கம் 2024 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவேண்டும். ஆசிரியர்கள் மீதான பக்தி மாணவர்களிடம் அதிகரிக்க வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளிடம் கூட பெற்றோர் அலைபேசியை கொடுக்கும் பழக்கத்திற்கு வரும் ஆண்டில் தீர்வு வேண்டும். குறிப்பாக ஆன்மிகத்துடன் அறிவியலையும் மாணவர்கள் அதிகம் கற்கும் வகையிலான கல்விமுறை வேண்டும். இதுதவிர தட்டுப்பாடின்றி நல்ல குடிநீர், தரமான ரோடுகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் ஆண்டாக 2025 பிறக்கட்டும்.
எனக்கான ஆண்டாக உதிக்கட்டும்
பி.ஜனனி, கல்லுாரி மாணவி, சூலப்புரம்: 2024 வாழ்க்கை எனும் புத்தகத்தில் சில பக்கங்கள் கனவுகளில் நனைந்தும், மனதோடு மடித்துக்கொண்டு சில பக்கங்களும், நினைத்தும் கிழித்தும் சில பக்கங்கள், அடிக் கோடிட்டு அழகாகவும் சில பக்கங்கள், வெற்றுக்காகிதமாக சில பக்கங்கள், எழுத்துப் பிழையாகும் சில பக்கங்கள்... இவ்வாறாக 2024 ஆண்டில் நிறைவுபெற்றது வாழ்க்கைப் புத்தகம். 2025 வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் என்னை நானே செதுக்கிக்கொள்ள எதிர்பார்க்கும் பக்கங்கள், புதுப்புது கற்றலின் தேடல், அத்தேடலில் புத்தகங்கள் வாசித்தல், அதன்வழி சுயபடைப்புகள் படைத்தல், இதனால் மனதாலும், தொழில் வளர்ச்சியாலும் முன்னேற எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எனக்காய் இந்தாண்டு உதிக்கட்டும்.
ஆரோக்கிய ஆண்டாக வரணும்
எஸ்.சிவபாலன், கல்லுாரி மாணவர், கருமாத்துார்: சில ஆண்டுகளைப்போல இல்லாமல் 2024ம் ஆண்டானது, எந்த விதமான தொற்று நோய்களும் பரவி, மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் கடந்து போயுள்ளது. வரும் 2025 வது ஆண்டும் தொற்று நோய்கள் பரவாமல் மக்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.