/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்
/
விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்
ADDED : நவ 03, 2025 04:01 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா சைஸ் களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன.
விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகித கூழ், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றார் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களிமண்ணால் ஒரு இன்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப்படுகிறது.
அதனை தயாரிக்கும் கவுரிசங்கர் கூறியதாவது: பரம்பரையாக குடும்பத்துடன் களிமண் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். 31 ஆண்டுகளாக இந்த பெரிய களிமண் அகல் விளக்குகளை தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. இந்த விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் எரியும். இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்கு 100 மில்லி கொள்ளளவு கொண்ட மூவாயிரம் விளக்குகளும் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணி கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

