/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு குறை தீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
/
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு குறை தீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு குறை தீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு குறை தீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
ADDED : பிப் 18, 2025 05:13 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராகவேந்திரன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு
உசிலம்பட்டி அருகே எரவார்ப்பட்டி ஊராட்சி கவுல்பட்டி பகுதி கருப்பசாமி அளித்த மனு: எங்கள் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஆய்வு செய்துள்ளனர். இங்கு விவசாயிகள், தினக்கூலி நபர்கள் அதிகம் வசிக்கிறோம். இந்த கடையால் பாதிப்பு ஏற்படும். கடையை அனுமதிக்ககூடாது.
கோயிலை திறக்க எதிர்ப்பு
கண்ணனேந்தல் மக்கள் அளித்த மனு: இப்பகுதி சாய்பாபா கோயில் பூஜாரி சசிக்குமார், சிறுமியை கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். மீண்டும் கோயில் திறந்தால் ஏதேனும் பிரச்னை நடக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.
டைடல் பார்க் திட்டத்திற்கு எதிர்ப்பு
மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் சங்கத்தினர் அளித்த மனு: இங்கு பூ, பழம், காய்கறி என எண்ணற்ற கடைகள் போக்குவரத்து நெருக்கடியில் 24 மணிநேரமும் இயங்குகிறது. டைடல் பார்க் அறிவிப்பால் தென்மாவட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் அதிர்ச்சியாகியுள்ளோம். தற்காலிக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இன்றியும் அதீத போக்குவரத்து இடையிலும் இயங்குகிறது. வீதி மீறல் அதிகமாக உள்ளது. 2010 அரசாணைப்படி புதிய மார்க்கெட் திட்டம் துவங்க வேண்டும். டைடல் பார்க் அமைதியான சூழலில் இருக்க வேண்டும். எனவே இங்கு அமையும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
மேலுார், வஞ்சிநகரம் ஊராட்சி கல்லாங்காடு கிராம மக்கள் அளித்த மனு: அரசின் தொழில்துறை சார்பில் எங்கள் பகுதியை இணைத்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேலைகள் தொடங்கிவிட்டன. இங்கு மேய்ச்சலே முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. 140 ஏக்கர் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கண்மாய் உள்ளது. நெல், கடலை, பயிர் விவசாயத்தை நம்பி இருப்பவர்களும் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். பறவை இனங்களும், காட்டுயிர்களும் வாழ்ந்து வருகின்றன. மூன்று முக்கிய கோயில்கள் அமைந்துள்ளன. முதுமக்கள் தாழி, கல்திட்டை போன்ற பெருங்கற்காலச் சின்னங்கள் பெருமலையில் கிடைக்கின்றன. எனவே சிப்காட் திட்டத்தை கைவிட்டு தொல்லியல் ஆய்வு நடத்தி, பல்லுயிர் மரபு தலமாக அறிவிக்க வேண்டும்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
திருமால் கள்ளிக்குடி கதிர்வேல் அளித்த மனு: பிப்.12ல் மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயிலை அகற்றும் போது மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவரான என் மகன் நாகலிங்கம் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். மாநகராட்சியும், முதல்வரும் எந்த இழப்பீடும் வழங்கவில்லை. எனவே ரூ. 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

