/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்
/
மதுரையில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்
ADDED : பிப் 08, 2025 05:11 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிய மினிபஸ்கள் இயக்க விரும்புவோருக்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: வழித்தட அனுமதி 25 கி.மீ.,க்குள் இருக்கும். பாதையின் நீளத்தில், குறைந்தபட்சம் சேவை இல்லாத பாதை 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது. தொடக்கம் அல்லது முனைய பகுதி சேவை இல்லாத குடியிருப்பு, கிராமம், பஸ்ஸ்டாப், பஸ்ஸ்டாண்ட் ஆகியவற்றில் ஏதாவது ஓரிடமாக இருக்க வேண்டும்.
அனுமதிக்கும் தொலைவான 25 கி.மீ., ன் முனையப் பகுதியை அடுத்து, ஒரு கி.மீ., துாரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்கு முறை கூடம், கலெக்டர், தாலுகா அலுவலகங்கள், புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் பரிசீலித்து அனுமதிப்பர்.
பழைய மினிபஸ் திட்டத்தில் அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்திற்கு மாற எழுத்துபூர்வமான விருப்பத்தை அளித்து, பழைய அனுமதிச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ., கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும். ரெகுலர் அல்லது மினிபஸ்கள் 4 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படும் பகுதிகள் சேவை செய்யப்படாத பாதையாக கருதப்படும்.
மினிபஸ்சில் ஓட்டுனர் இருக்கை தவிர்த்து, 25 சீட்கள் இருக்க வேண்டும். பஸ்சின் வீல் பேஸ் 390 செ.மீ.,க்கு மிகாமல் இருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிபஸ் திட்டப்படி வழித்தட விபரங்கள் ஏதும் இருந்தால், பொதுமக்கள், பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள், பஸ், மினிபஸ் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பிப்.15 க்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலு கூறுகையில், ''மாவட்டத்தில் எத்தனை மினிபஸ்களுக்கும் அனுமதி பெறலாம். பஸ்போக்குவரத்து இல்லாத வழித்தடம் குறித்து பரிசீலிக்கிறோம். பொதுமக்களும் இதுபற்றி தெரிவித்தால் பரிசீலிப்போம்'' என்றார்.