/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் திட்டம் வரவே வராது வழக்குகளை ரத்து செய்ய உறுதி அமைச்சர் மூர்த்தி உறுதி
/
டங்ஸ்டன் திட்டம் வரவே வராது வழக்குகளை ரத்து செய்ய உறுதி அமைச்சர் மூர்த்தி உறுதி
டங்ஸ்டன் திட்டம் வரவே வராது வழக்குகளை ரத்து செய்ய உறுதி அமைச்சர் மூர்த்தி உறுதி
டங்ஸ்டன் திட்டம் வரவே வராது வழக்குகளை ரத்து செய்ய உறுதி அமைச்சர் மூர்த்தி உறுதி
ADDED : ஜன 10, 2025 05:26 AM

மேலுார்: ''மேலுார் பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. திட்டத்தை எதிர்த்து போராடிய ஐந்தாயிரம் பேர் மீது போலீசார் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்'' என அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா ஆகியோர் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு உட்பட பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இப்பகுதியில் 11 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க டெண்டர் பெற்றுள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி அப்பகுதி பொது மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
இதையடுத்து நேற்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எஸ் .பி., அரவிந்த் ஆகியோர் கிராம மக்களை நேரில் சந்தித்தனர். பொதுமக்களிடையே அமைச்சர் பேசியதாவது: கிராமங்களுக்கு நேரில் சென்று டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற முடிவை மக்களுக்கு தெளிவுபடுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் கூறியதால் இங்கு வந்துள்ளேன்.
மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கிராமத்தினர், விவசாய சங்கத்தினர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். நான் முதல்வராக இருக்கும் வரை மேலுார் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை வரவிட மாட்டேன். அதற்காக பதவியை கூட ராஜினாமா செய்வேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே மேலுார் பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். ஒரு சில பகுதிகளை ஒதுக்கி விட்டு, மறு பகுதிகளை ஆய்வு செய்யலாமா என்றுகூட டில்லியில் கேட்டதாக சொன்னார்கள். ஆனால் எந்தப் பகுதியாக இருந்தாலும் கொடுக்க முடியாது. இப்பகுதி மக்களுக்கு ஒரு துளி கூட பிரச்னை வராமல் நம்முடைய முதல்வர் பார்த்துக் கொள்வார்.
மேலுார் நடைப் பயணத்தில் கலந்து கொண்ட ஐந்தாயிரம் பேர் மீது, போடப்பட்ட வழக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தள்ளுபடி செய்ய வேண்டியது என் பொறுப்பு என்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கூடுதல் கலெக்டர் வைஷ்ணவி பால் பங்கேற்றனர்.