/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாயை காணவில்லை... கலங்கும் மேலுார் விவசாயிகள்
/
கால்வாயை காணவில்லை... கலங்கும் மேலுார் விவசாயிகள்
ADDED : செப் 16, 2025 04:31 AM

மேலுார்: மேலுார் பகுதி கால்வாய் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கியும் நீர்வளத் துறையினர் சரி செய்யாததால் 700 ஏக்கர் தரிசாகும் அவலம் நிலவுகிறது.
கள்ளந்திரி பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து கிடாரிப்பட்டியில் துவங்கும் 41வது வேப்பங்குளத்து கால்வாய் 2 பிரிவுகளாக செல்கிறது. ஒரு கால்வாய் 10 கி.மீ., தொலைவில் உள்ள அரிட்டாபட்டி வரையும் மற்றொரு பிரிவு கால்வாய் உடையாகுடி, ஒய்யக் கொண்டான் கண்மாய்களுக்கு செல்கிறது.
இக்கால்வாயில் செல்லும் தண்ணீரால் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி அதன் மூலம் 700 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். சிதிலமடைந்த கால்வாயை நீர்வளத் துறையினர் சரி செய்யாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: உடையாகுடி, ஒய்யகொண்டான் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்து கால்வாயை காணவில்லை என்ற நிலை உள்ளது. தவிர அரிட்டாபட்டி செல்லும் கால்வாய் முழுவதும் மணல் நிரம்பியும் மரங்கள் முளைத்துள்ளன. மூன்று நாட்களில் திறக்கப்படும் தண்ணீர் கண்மாயை சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. மேலும் பராமரிப்புக்காக ஒதுக்கிய நிதியையும் பயன்படுத்தாமல் முறைகேடு செய்கின்றனர். இதற்கு பிறகாவது நீர்வளத்துறையினர் கால்வாயை பராமரித்து தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில்,கால்வாயை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்துள்ளேன். மேலும் கால்வாய் பழுது நீக்கப்படும் என்றார்.