திருப்பரங்குன்றத்தில் அலைபேசி பாதுகாப்பு கட்டண வசூல் ரத்து
திருப்பரங்குன்றத்தில் அலைபேசி பாதுகாப்பு கட்டண வசூல் ரத்து
ADDED : செப் 08, 2026 04:41 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் அலைபேசி பாதுகாப்புக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவுப்படி செப். 1 முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக கோயில் முன்புறம் பொருள்கள் பாதுகாப்பு அறை, சொக்கநாதர் கோயில் முன்பு அலைபேசி பாதுகாக்க பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது.
செப். 1 முதல் பக்தர்களின் கைபேசி ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்து, அவர்களது அலைபேசி விவரங்களுடன் பதிவு செய்து ரசீதும் கொடுக்கப்பட்டது. தரிசனம் முடித்து பக்தர்கள் ரசீதை கொடுத்து அலைபேசியை திரும்ப பெற்றனர்.
பக்தர்கள் அவதி: பக்தர்கள் கூட்டமாக வருவதால் பாதுகாப்பு பெட்டக பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சில்லரை இன்றி ரூ. 20, ரூ.50 கொடுத்தவர்களுக்கு மீதி வழங்க முடியாமல் திணறினர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் அலைபேசியை பாதுகாக்க ரூ. 5 கட்டணம் வசூலிப்பது நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. இனி கட்டணம் இன்றி அலைபேசிகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்துச் செல்லலாம். முகத்தை ஸ்கேன் செய்வது, அலைபேசி விவரம் பதிவு செய்தல், ரசீது வழங்கும் நடைமுறை தொடர்கிறது.
