/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணியஞ்சியில் வடிகாலில் வீணடிக்கப்பட்ட நிதி
/
மணியஞ்சியில் வடிகாலில் வீணடிக்கப்பட்ட நிதி
ADDED : மே 18, 2025 03:00 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் மணியஞ்சி ஊராட்சியில் மேடாக கட்டப்பட்ட வடிகாலால் கழிவுநீர் ரோட்டில் ஓடி, பள்ளி முன் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இக்கிராம சுந்தர்ராஜன் தெருவில் 2022ல் ரூ.1.74 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. இப்பகுதி வீடுகளை விட வடிகால் மேடாக இருப்பதால் இன்று வரை கழிவு நீர் செல்ல முடியாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதுடன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே தேங்குகிறது.
இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை, நோய் தொற்று அதிகரிக்கிறது. 3 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராத வடிகாலின் கான்கிரீட்டின் அடிப்பகுதிகள் சேதமடைய துவங்கியுள்ளன. மேலும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கிராம பகுதிகளில் வடிகால்கள் சுத்தம் செய்வதில்லை என கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிதியை வீணடிக்காமல் வடிகாலினை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.