ADDED : டிச 10, 2025 05:57 AM
திருப்பரங்குன்றம்: முருங்கைக் காய்களுக்கு நல்ல விலைகிடைத்தும், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர். சமீபகாலமாக முருங்கைக்காய் கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்கிறது. அதற்கேற்ப விளைச்சல் இன்றி உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: அதிக மகசூல் கிடைக்கும் சமயங்களில் கிலோ அதிகபட்சமாக ரூ. 50, குறைந்தபட்சமாக ரூ. 5 க்கும் கூட விற்கும். ஆனால் தற்போது அதிக விலைக்கு விற்கிறது. ஆனால் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு விளைச்சல்தான் இல்லை.
மழை பெய்வதால் முருங்கை மரங்களில் மஞ்சள் நோய், புழுத் தாக்கம் ஏற்பட்டு இலைகள் உதிர்ந்து விடுகிறது. எத்தனைமுறை மருந்து தெளித்தாலும் பயனில்லை. சிலர் வயல்களில் இலைகள் இருக்கும் மரங்களில், தற்போது சிறிதளவில் மட்டுமே பூக்கள் பிடிக்கத் துவங்கியுள்ளன.
மழைக் காலங்களிலும் முருங்கை காய்கள் காய்க்கும் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஏராளமான விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் இருந்து வேறு விவசாயத்திற்கு மாறிவிடுவர் என்றனர்.

