ADDED : நவ 10, 2024 04:04 AM
மதுரை, : மதுரை பிபீகுளம் கண்மாயை ஒட்டிய முல்லைநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி சார்பில் பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கண்மாய் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வாங்க மறுத்தவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைநகர் மக்கள் நேற்று மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டனர். போலீசார் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் 5 பேர் முதல்வரை சந்திக்க புறப்பட்டனர். ஆனால் முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். முதல்வரிடம் மனு அளிக்கும் வரை போராட்டம் தொடர முடிவு செய்துள்ளனர்.