/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி பைபாஸ் ரோடு பணிகள் எப்போது துவங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்
/
உசிலம்பட்டி பைபாஸ் ரோடு பணிகள் எப்போது துவங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்
உசிலம்பட்டி பைபாஸ் ரோடு பணிகள் எப்போது துவங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்
உசிலம்பட்டி பைபாஸ் ரோடு பணிகள் எப்போது துவங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்
ADDED : டிச 23, 2024 05:15 AM
மதுரை: தமிழகத்தில் தொண்டியில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வரை 350 கி.மீ.,க்கும் கூடுதலான தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.85) பணிகள் நடக்கின்றன. இதில் மதுரை, தேனி, மூணாறு வழியாக ஏற்கனவே உள்ள ரோட்டை அகலப்படுத்தி, தேவையான மேம்பாலங்கள், பைபாஸ் ரோடு என அமைக்க வேண்டியுள்ளது.
மதுரை நகருக்குள் எச்.எம்.எஸ்., காலனியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து நாகமலை புதுக்கோட்டை வரை பைபாஸ் ரோடு, மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, போடிநாயக்கனுார் பகுதிகளில் பைபாஸ் ரோடு அமைய உள்ளது.
இந்த ரோட்டில் உசிலம்பட்டிக்கு முன்புள்ள திருமங்கலம் விலக்கில் இருந்து நகருக்கு சில கி.மீ., தெற்கு பகுதி வழியாக சென்று மாதரை பகுதியில் தற்போதுள்ள ரோட்டில் சேரும் வகையில் (10 கி.மீ.,) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) திட்டமிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை விளக்கம்
இந்த பைபாஸ் ரோட்டின் தற்போதைய நிலை குறித்து தேனி எம்.பி., தங்கத்தமிழ்ச் செல்வனிடம், செல்லம்பட்டி வட்டார முன்னாள் காங்., தலைவர் விஜயபிரபாகரன் 'உங்கள் தொகுதியில்முதலமைச்சர்' திட்டத்தில் மனு கொடுத்தார்.
இதற்கு தேசிய நெடுஞ்சாலை மதுரை கோட்டத்தில் இருந்து பதில் அனுப்பியுள்ளனர். அதில், 'பைபாஸ் ரோடு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் உசிலம்பட்டி பைபாஸ் ரோடு வரைபடம், கடந்த செப்டம்பரில் டில்லியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வரைபடத்தில் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளனர்' என பதிலளித்துள்ளனர்.
பணிகள் துவங்குவது எப்போது
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது: இப்பணிகளை முதலில் 'நகாய்' அமைப்பே செய்வதாக இருந்தது. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டில்லியில் டைரக்டர் ஜெனரல் தலைமையில் நடந்த கூட்டத்தில் 'நகாய்' தயாரித்த பைபாஸ்ரோடு வரைபடத்தில் சில மாற்றங்களை கேட்டுள்ளனர். இதுகுறித்து டிச.27 ல் தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அறிக்கை வழங்கப்படும்.
இந்த பைபாஸ் ரோடுகள் அமையும்விதம், தேவையான நில எடுப்பு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். அதன்பின் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க சில மாதங்கள் ஆகும்'' என்றனர்.

