/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நியோமேக்ஸ் மோசடி வழக்கு:தாமத புகாரை சாட்சியாக சேர்க்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
/
நியோமேக்ஸ் மோசடி வழக்கு:தாமத புகாரை சாட்சியாக சேர்க்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
நியோமேக்ஸ் மோசடி வழக்கு:தாமத புகாரை சாட்சியாக சேர்க்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
நியோமேக்ஸ் மோசடி வழக்கு:தாமத புகாரை சாட்சியாக சேர்க்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 10, 2025 01:51 AM
மதுரை : நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தயாராகியுள்ள நிலையில் தாமதமாக புகாரளித்தவர்களை சாட்சிகளாக சேர்த்து வாக்குமூலம் பெற்றால் விசாரணை தாமதமாகும். மனுதாரர்களை சாட்சிகளாக சேர்க்க வேண்டியதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஜனனி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோம். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தோம். நியோமேக்ஸில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் பட்டியலில் எங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களை சேர்த்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்.
நிறுவன சொத்துக்களை அடையாளம் காண வேண்டும். விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனு: நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக 2025 ஜூலை 24 வரை 14 ஆயிரத்து 460 புகார்கள் வந்துள்ளன. இப்புகார்தாரர்கள் ரூ.1866 கோடியே 3 லட்சத்து 88 ஆயிரத்து 221 முதலீடு செய்துள்ளனர். குற்றவாளிகளில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புகாரளிக்க காலக்கெடு விதித்து சிறப்பு முகாம் நடந்தது. மனுதாரர்கள் காலக்கெடு முடிந்த பின் புகாரளித்துள்ளனர். வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தயாராகியுள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தற்போது மனுதாரர்களை சாட்சிகளாக சேர்த்து வாக்குமூலம் பெற்றால் விசாரணையை பாதிக்கும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காலக்கெடு முடிந்தபின் மனுதாரர்கள் புகாரளித்துள்ளனர். அவர்களின் புகார்களை தனியாக பராமரிப்பது தான் சரியாக இருக்கும்.
சில மனுதாரர்கள் நியோமேக்ஸ் நிறுவன சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் அச்சொத்துக்களை மதிப்பீட்டுக்குழுவுடன் இணைந்து வழக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தயாராகியுள்ள நிலையில் மனுதாரர்களை சாட்சிகளாக சேர்த்து வாக்குமூலம் பெற்றால் விசாரணை தாமதமாகும். இதனால் மனுதாரர்களை சாட்சிகளாக சேர்க்க வேண்டியதில்லை. அவர்களின் புகார்களை மற்றொரு பட்டியலில் சேர்த்து பராமரிக்க வேண்டும். அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மனுதாரர்கள் முதலீடு செய்த தொகையை சரிபார்த்து, அதை மீட்கப்படும்பட்சத்தில் தொகையை திரும்ப பெற அவர்களுக்கு உரிமை உண்டு. இவ்வாறு உத்தரவிட்டார்.