ADDED : செப் 06, 2024 05:19 AM

வாசகர்கள் மனதில் நீங்கா இதழ்
கே.எம்.எஸ்.தெய்வசிகாமணி,ஏஜன்ட், தேவகோட்டை
தேவகோட்டையில் பல ஆண்டுகளாக தினமலர் நாளிதழின் ஏஜன்ட் என்பதில் பெருமை. அதிகாலையில் வாசகர் இல்லம் தேடி விநியோகம் செய்வது அளவில்லா மகிழ்ச்சி. 365 நாளும் வாசகர்களை சந்திக்கும்நாளிதழ். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்த காலத்தில் அதே விலையில் அதிக பக்கங்களில் அதிக செய்திகளுடன்வாசகர்களுக்கு மருந்து தெளித்து தந்த ஒரே நாளிதழ் தினமலர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பிரச்னைகளாக இருந்தாலும் குரல் கொடுப்பதால் அவர்கள் மத்தியில் அதிகம் படிக்கும் நாளிதழ் தினமலர். உள்ளூர் செய்தி முதல் உலக செய்திகள் வரை பாரபட்சமின்றி வெளியிடுவதால் வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நாளிதழ்.
அரசு ஊழியர்களின் இணைப்பு பாலம்
ஆர்.ராதாகிருஷ்ணன், செயலாளர்,அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை
அரசு ஊழியருக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக தினமலர் செயல்படுகிறது. ஊழியர்களின் கோரிக்கையை, அரசுக்கு தைரியமாக எடுத்து சென்று நிறைவேற்றி தருவது தான் அதன் சிறப்பு. சொல்லவேண்டிய கருத்துக்களை தெளிவாக, துணிச்சலுடன் எடுத்து வைப்பதில் ஒரு போதும் தயக்கம் காட்டாத நாளிதழ். வாசகர்கள், மக்கள், அரசு ஊழியர், அரசுக்கும் இடையே 'நான்காம் துாண்' ஆக தனது பணியை செவ்வனே செய்வது பாராட்டுக்குரியது.
உலக வர்த்தகம் தரும் நாளிதழ்
ஜி.செம்மலர், வர்த்தகர், சிவகங்கை
மற்ற நாளிதழோடு ஒப்பிடுகையில் செய்தியில் தெளிவு, துணிவு இருப்பது தான் தினமலருக்கு சிறப்பு. உலகம், வர்த்தகம், பங்கு சந்தை செய்திகள் பார்ப்பதன் மூலம் உலக வியாபாரத்தை அறிய முடிகிறது. மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து தீர்வு பெற்றுத்தரும் நாளிதழ். தினமலரில் செய்தி வெளியாவது மக்களுக்கும், அரசுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் இருப்பது தான் அந்நாளிதழின் சிறப்பு.
யாருக்கும், எதற்கும் தயங்காத நாளிதழ்
பி.பாண்டி, மாநில செயலாளர்,தமிழ்நாடு அனைத்து சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், சிவகங்கை
உண்மையான செய்திகளை வெளியிடுவதில், தலைசிறந்த நாளிதழ் தினமலர். அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செய்திகள் தெளிவாக வெளியிட்டு, அரசின் பார்வைக்கு கொண்டு சென்று, அதற்கு தீர்வு பெற்று தருவது தான் சிறப்பு. இதன் காரணமாகவே தினமலர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.குறிப்பாக யாருக்கும், எதற்காகவும் தயங்காமல் செய்தி வெளியிடுவது தான் தினமலருக்கே உரிய சிறப்பு.
முழு தகவல் தரும் நாளிதழ்
ஆர்.பாண்டிவேல், தொழிலதிபர், சிவகங்கை
ஒரு நாளிதழை முழுமையாக படித்தாலே உலகளவில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இத்தகுதியை மக்களிடம்பெற்ற நாளிதழ் தினமலர். எழுத்துக்களில் தெளிவு, பிரச்னை செய்திகளை அதற்கே உரிய பாணியில் வெளியிடுவதில் உள்ள துணிவு தான் நாளிதழ் வெற்றிக்கு காரணம். தினமும் எத்தனை நாளிதழ்களை படித்தாலும், தினமலரை படித்தால் மட்டுமே, முழு தகவலையும் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி வாசகர்களுக்கு ஏற்படுகிறது.
எளிமையான தமிழில் வரும் செய்தி
என்.தேவிபிரியா, வழக்கறிஞர், சிவகங்கை
அனைத்து தரப்பினரும்படிக்கும் வண்ணம், எளிமையான தமிழில் செய்திகள் வருவது, இந்நாளிதழின் வெற்றிக்கு காரணம். அனைத்து செய்திகளையும் வழங்குவது தினமலரின் சிறப்பு. சட்ட ரீதியாக வெளிவரும் செய்திகளை எங்களை போன்ற வழக்கறிஞர்கள் பார்த்து அறிந்து கொள்வது தினமலரில் மட்டும் தான். அடித்தட்டு மக்களின் பிரச்னைக்கு கூட செய்தி வழியில் தீர்வு பெற்று தருவதால் 'தினமலருக்கு நிகர் தினமலர்' தான் என மக்களால் பேசப்படுகிறது.
தினமலர் ஒரு கருத்து பெட்டகம்
சேவு.முத்துக்குமார், நல்லாசிரியர், காரைக்குடி
சிறுவர் முதல் பெரியவர்வரை படித்து மகிழும் தலை சிறந்த நாளிதழ் தினமலர். அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி அன்றாடம் செய்திகளை உள்ளது உள்ளபடி உரைக்கும் நாளிதழ். தினமலரின் இணைப்புகளான வாரமலர், ஆன்மிக மலர், சிறுவர் மலர், கல்விமலர், தொழில் மலர், கடையாணி, விவசாயமலர், பட்டம் என்று அனைத்து வயது பிரிவினருக்கும் ஏற்ற கருத்துப் பெட்டகம். வண்ணப்படங்களோடு செய்திகளைத் தருவதில் தினமலருக்கு நிகர் தினமலரே. பலதுறை சாதனைகளை பாராட்டும் தினமலர் 2014ல் எனக்கு வழங்கிய லட்சிய ஆசிரியர் விருதே நான் தொடர்ந்து பெறும் பல்வேறு விருதுகளுக்கு உந்து சக்தி. இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை நான் பெற்றதற்கு அன்று தினமலர் தந்த ஊக்கமே காரணம்.
மகளிர் முன்னேற்றத்தில் தினமலர்
தீபலெட்சுமி, பெரியகோட்டை
தினந்தோறும் மலரும்தினமலர் நாளிதழ் மகளிர் முன்னேற்றத்தில் பெரிதும் பங்கெடுத்து வருகிறது. குடும்பத் தலைவிகளை ஊக்கப்படுத்தவும், கைத்தொழில்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயரவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் மகளிரை பெருமைப்படுத்தி அவர்களின் கட்டுரைகளை வெளியிட்டு மற்றவர்களும் முன்னேற அரும்பாடுபட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் முன்னேறி வருவதை நாளிதழ் வழியாக மற்ற மகளிர்களுக்கும் வெளிக்கொணர்ந்து வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.
எதிர்காலத்திற்கான வரலாற்று பதிவு
எல்.ஜெயச்சந்திரன்,தமிழ் ஆர்வலர், திருப்புத்துார்
தமிழர்களின் விடியலில் 'கொக்கரக்கோ' அழைப்பும், சூரிய பவனியுமாக தினமலர்ஒரு பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது. தினமலர் செய்தி பக்கங்கள் எதிர்காலத்திற்கான வரலாற்றுப்பதிவுகளாகவே உள்ளன. குழந்தைகள் கூட விரும்பி கேட்கும் வகையில் உள்ள ஒரே நாளிதழ். கிராமத்து ஜனங்களும் படிக்கும்வகையில் எளிமையான தமிழ்நடை. இன்றைய தலைமுறையின் வாசிப்புத் திறனை வளர்க்கிறது.
காவல்துறையின் உயிர் நாடி
பா.ஜெயபாண்டியன்,இன்ஸ்பெக்டர் ஓய்வு, சிவகங்கை
தினமலர் நாளிதழை 20 வருடமாக தொடர்ந்து படித்து வருகிறேன். தினமலர்,காவல்துறையின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. காவல்துறையில் பணி புரியும்போது சங்கம் வைக்கக்கூடாது பொது வெளியில் உண்மையை சொல்லக்கூடாது என்ற வரைமுறை உள்ளது. அதற்காக நாங்கள் தினமலர் உதவியை நாடினோம்; எங்கள் குறைகளை தெரிவித்த போது அதன் உண்மை நிலை அறிந்து வெளியிட்டனர். உடனே எங்களுக்கு உரிய நீதி கிடைத்தது. தினமலர் அரசுக்கும்காவல்துறைக்கும் பாலமாக உள்ளது. அரசியல் அதிகாரத்திற்கு அடிபணியாத பத்திரிகையாக உள்ளது.
ஆயிரம் மனுவிற்கு ஒரு செய்தி சமம்
எஸ்.ஆர்த்தி, வாசகர், திருப்புவனம்
தினமலர் நாளிதழில்மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி செய்தி வெளியிடப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் தேவை என்பதையும் கருத்தில் கொண்டு வெளியிடப்படுகிறது. குறைகளை தினமலர் சுட்டி காட்டும் போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆயிரம் மனுக்கள் வழங்கியும் கண்டு கொள்ளாத நிலையில், தினமலர் செய்தியால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உரை கல்லாய் ஜொலிப்பு
எஸ்.சுமன், பட்டதாரி இளைஞர், எஸ்.புதுார்
தேசநலனில் சமரசமற்ற துணிச்சல், நேர்மையுடன் செய்திகள் வெளியிடுவதுடன், உண்மையின் உரைகல்லாய் ஜொலிக்கும் தினமலர் நாளிதழின் வாசகர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆசிரியர், மாணவருக்கு இணைப்பு பாலம்
வி.சுந்தரராமன்,முதுகலை ஆசிரியர் (ஓய்வு), காரைக்குடி
தினமலர் நாளிதழில் டீகடை பெஞ்ச் முதல் டில்லி உஷ் வரை அனைத்து செய்திகளும், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர், மாணவர் வளர்ச்சிக்கு இணைப்பு பாலமாக இந்நாளிதழ் திகழ்கிறது. தினமும் மலரும் இந்நாளிதழை காலையில் படித்து பார்க்க அதிகாலை முதலே மனம் படபடப்புடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.அந்தளவிற்கு தெளிவான நடையில் செய்திகளை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.
உண்மைக்கு கிடைத்த அங்கீகாரம்
எஸ்.முத்துப்பிரகாஷ்,தொழில் முனைவோர், சிங்கம்புணரி
மக்கள் பிரச்னைகள் குறித்த செய்திகள் தினமலரில் வெளியானவுடன், உடனே அவை நிவர்த்தி செய்யப்படுவது தினமலரின் உண்மை செய்திகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.தேசியம், தெய்வீகம்என வீறுநடைபோடும் தினமலரில் தொழில், வர்த்தக செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பயனுள்ளது. தினமலர் வாசகர் என்று கூறிக்கொள்வதே கவுரவம் தான்.
மறைக்கப்படாத செய்திகள்
அ.ரமேஷ், அரசு பஸ் ஓட்டுநர், தேவகோட்டை
25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழை படித்து வருகிறேன். டீ கடை பெஞ்ச் பகுதியில் அனைத்தும் வந்து விடும். அரசு தொடர்பான செய்திகள்மற்ற ஊடகங்கள், நாளிதழ்களில் மறைக்கப்பட்ட செய்திகள் தினமலரில் விலாவாரியாக வந்து விடும். பட்ஜெட், முக்கியமான நிகழ்வுகளில் தெளிவாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் தொகுத்து வழங்குகின்றனர். தினமும் வரும் ஆன்மிக செய்திகளோடு வெள்ளிக்கிழமை வரும் ஆன்மிக மலரில் ஆன்மிகம் பற்றிய பல தகவல்கள் குறிப்பாக புதிய கோயில்களை பற்றி படித்துள்ளேன்.
தேசம் காக்கும் இதழ்
மு.பாலசுப்பிரமணியன்,தினமலர் ஏஜன்ட், சிங்கம்புணரி
மூன்று தலைமுறையாக தினமலர் நாளிதழின்ஏஜன்டாக பணிபுரிந்து வருகிறேன். வருமானம் ஒரு பகுதியாக இருந்தாலும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை துணிச்சலோடு எடுத்துச் சொல்லும் பாங்கு மற்றும் தேசம் காக்கும் இந்த நல்ல பணியில் தினமலரோடு பயணிப்பதில் பெருமை கொள்கிறோம்.
படிக்கத் துாண்டும்
நா.ராமேஸ்வரன், கல்வியாளர், திருப்புத்துார்
பார்த்தவுடன் படிக்கத் துாண்டும் எழுத்துக்களுடன் அழகாக வடிவமைக்கப்படும் நாளிதழ். பள்ளி, கல்லுாரி சம்பந்தப்பட்ட தகவல்களை அதிகமாக வெளியிடுகின்றனர். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை தேவையான பல தகவல்களையும் தரும் நாளிதழ். மாநில தேசிய, சர்வதேச, உள்ளூர் செய்திகள், கல்வி,வேலை வாய்ப்பு குறித்தும், தொழில்நுட்ப, வர்த்தக, விளையாட்டு செய்திகள் இளைஞர்களுக்கு உபயோகமளிக்கும்.
மதிப்புமிகு மாணவிகளாக்கும்
அ.பூர்ண நிவேதா,கல்லுாரி மாணவி, மானாமதுரை
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்காக தினமலர் நாளிதழ் பொதுஅறிவு பொக்கிஷங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான செய்திகளை தருவதில் முதன்மையாக உள்ளது. மாணவர்களுக்காகவே பட்டம் எனும் இதழை தனியாக வழங்குவதோடு கல்வியில் மதிப்புமிகு மாணவர்களாக மாற்றி வருகிறது. பல்வேறு தேர்வுகளின் மாதிரி தேர்வுகளை நடத்தி சந்தேகங்களுக்கு விளக்கமளித்து வருகிறது. தினமலர் நாளிதழுக்கு நன்றியை மாணவர் சமுதாயம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இளைஞர்களுக்கு வழிகாட்டி
டாக்டர். ரமேஷ்,அறுவை சிகிச்சை நிபுணர், காரைக்குடி
பள்ளிப் பருவத்தில் இருந்து 35 வருடமாகதினமலர் படித்து வருகிறேன். தினமலர் செய்தியை, அதில் வரும் எதுகை மோனை தலைப்பிலேயே அறிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.
அனைவருக்கும் ஏற்ற நாளிதழ்
எம்.ராஜரத்தினம், கட்டட பொறியாளர் சங்க முன்னாள் தலைவர், காரைக்குடி
எனது தந்தை காலத்தில் இருந்தே நாங்கள் தினமலர் வாசகர்கள். பள்ளி காலத்தில் தொடங்கி இன்று வரை தினமலரை விரும்பிப் படிப்பதற்கு காரணம் உண்மையின் உரைகல் என்பதை நிரூபித்து வருகிறது. குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் அரசு பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆன்மிகவாதிகள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் கட்டுரைகளையும், செய்திகளையும், மலர்களையும் வெளியிடுவது தினமலர் நாளிதழின் சிறப்பு.
பிரச்னைக்கு முக்கியத்துவம்
வீ.இளங்கோ, ஓய்வு பெற்ற ஆசிரியர்,கண்டவராயன்பட்டி
பொதுமக்களின் வாழ்வாதார, அன்றாட பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தீர்வு காண உதவுகிறது. மக்களுக்கு நடைமுறையில் தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசிடம் சேர்க்கவும், அரசு சார்ந்த தகவல்களை மக்களிடம் சேர்க்கவும் செய்கிறது.