UPDATED : நவ 10, 2026 10:06 AM
ADDED : நவ 10, 2026 10:02 AM
பேரையூர்: பேரையூரில் இருந்து தொலைதுார இடங்களுக்கு நேரடி, சிறப்பு பஸ்கள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
பேரையூரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இதனால் இப்பகுதியினர் பலர் அடிக்கடி மேற்கண்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். தீபாவளி விடுமுறையில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்தனர்.
அவர்கள் திரும்ப வேலைக்கு செல்வதற்கு நேரடி பஸ்கள் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகினர். பேரையூரில் இருந்து சென்னை சென்ற பஸ், கடந்த 6 மாதங்களாக இயக்கப்படவில்லை. அதேபோல் பெங்களூருவுக்கு சென்று வந்த பஸ், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகையின் போதாவது சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்தனர். பண்டிகை காலத்திலும் இயக்கப்படாததால், பேரையூர் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
