/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடிக்கம்பம், பீடங்களில் நோட்டீஸ்; அகற்றாவிடில் கட்சிகளிடம் வசூல் என எச்சரிக்கை
/
கொடிக்கம்பம், பீடங்களில் நோட்டீஸ்; அகற்றாவிடில் கட்சிகளிடம் வசூல் என எச்சரிக்கை
கொடிக்கம்பம், பீடங்களில் நோட்டீஸ்; அகற்றாவிடில் கட்சிகளிடம் வசூல் என எச்சரிக்கை
கொடிக்கம்பம், பீடங்களில் நோட்டீஸ்; அகற்றாவிடில் கட்சிகளிடம் வசூல் என எச்சரிக்கை
ADDED : மார் 31, 2025 06:01 AM

மதுரை : ஐகோர்ட் உத்தரவையடுத்து பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும்படி நெடுஞ்சாலைத் துறையினர் கட்சிக் கொடிக்கம்பங்களில் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.
மதுரை மட்டுமின்றி எல்லா நகரங்கள், கிராமங்களில்கூட ரோடு சந்திப்புகளில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆக்கிரமித்துள்ளன. சில கட்சிகள் புதிது புதிதாக கொடிக் கம்பங்களை நடுவதற்கு முன்வருவதும், அதிகாரிகள் அவற்றை தடுப்பதும், இதனால் தகராறு, தள்ளு முள்ளு ஏற்படுவதும் வழக்கமாகி விட்டது.
இதையடுத்து மதுரை பழங்காநத்தம் கதிரேசன் பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிடக்கோரி, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இதில் 12 வாரங்களுக்குள் (ஏப்.27 க்குள்) பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஜனவரி 27ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் கே.புதுார், கோரிப்பாளையம், கலெக்டர் அலுவலக ரோடு, அண்ணாநகர், பழங்காநத்தம், அவனியாபுரம், வில்லாபுரம் உட்பட பெரும்பாலும் ரோடுகளில் உள்ளதால் அவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறை முதல் ஆளாக முன்வந்துள்ளது.
மதுரை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுகுமாறன், ஆனந்த், சீத்தாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடந்த ஜனவரியில் நோட்டீஸ் அனுப்பினர்.
இதுவரை அதற்கு எந்த பலனுமில்லை. எனவே நடவடிக்கையை நினைவுபடுத்தும் வகையில் கட்சிக் கொடிக்கம்பங்கள், அவற்றின் பீடங்களில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.
அதில், ''நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை தாங்களே அகற்ற வேண்டும்.
தவறினால் நெடுஞ்சாலைத்துறை 14 நாட்களுக்கு முன் தகவல் கொடுத்து அகற்றி, அதற்கான செலவை அரசியல் கட்சிகளிடமே வசூலித்துக் கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளனர்.