/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவ. 2ல் சோலைமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
நவ. 2ல் சோலைமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : அக் 25, 2024 05:27 AM
அழகர்கோவில்: அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா நவ. 2 முதல் 8 வரை ஏழு நாட்கள் நடக்க உள்ளது.
முதல் நாள் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல், யாகசால பூஜைகளுடன் விழா தொடங்கும்.
அன்று அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருமுருகாற்றுப்படையை நக்கீரருக்கு தந்தருளும் அலங்காரம், இரண்டாம் நாள் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, முருகப் பெருமான் பஞ்சலிங்க பூஜை செய்யும் அலங்காரம் நடைபெறும்.
மூன்றாம் நாள் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திரு ஆவினன்குடி வரலாறு அலங்காரம், 4ம் நாள் ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, தந்தைக்கு உபதேசம் செய்த அலங்காரம், 5ம் நாள் சப்பர வாகனத்தில் வீதி உலா, வள்ளியை யானை விரட்டி முருகனிடம் சேர்த்த அலங்காரம் நடைபெறும்.
சூரசம்ஹாரம்
நவ. 7 ல் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 3:45 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்வு நடைபெறும். மாலை 4:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோயிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகா சூரனையும், தல விருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்யும் 'சூரசம்ஹார' நிகழ்வு நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு மேல் சாந்தாபிஷேகம் செய்து, அவ்வைக்கு நாவல் கனி கொடுத்த அலங்காரம் செய்யப்படும்.
நவ. 8 ஏழாம் நாள் காலை 10:00 முதல் 10:15 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். காலை 11:30 மணிக்கு உற்ஸவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னப்பாவாடை தரிசனம் நடைபெறும். பின் பல்லக்கு வாகனத்தில் சுவாமி வீதியுலா, ஆறுபடை வீடு அலங்காரம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் கந்த சஷ்டி நிறைவு பெறும்.
விழா நாட்களில் தினமும் காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு சண்முகார்ச்சனை, 11:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், இணை கமிஷனர் செல்லத்துரை, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

