ADDED : மே 23, 2025 12:23 AM
பேரையூர்:சேடப்பட்டி பகுதிகளில் கோடையில் சாகுபடி செய்த சோளம், மக்காச்சோளம் பயிர்களில் சத்து குறை ஏற்பட்டு இலை ஓரங்களில் சிவப்பு நிற பட்டை தோன்றி பின்னர் கருகும் அறிகுறிகளுடன் உள்ளது.
சேடப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறியதாவது: இதனை சரி செய்ய பயிர் சாகுபடிக்கு முன்னரே ஏக்கருக்கு 25 கிலோ பொட்டாஷ் உரத்தினை அடி உரமாக இட வேண்டும். வளர்ந்த பயிர்களில் அறிகுறி காணப்பட்டால் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலை வழியாக தெளிக்க வேண்டும்.பொதுவாக இரண்டாம் பருவத்தில் சாகுபடி செய்யும்போது நிலத்தில் உள்ள சத்துக்களை முதல் பயிர் எடுத்துக் கொள்வதன் மூலம் இரண்டாம் பயிருக்கு சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும். எனவே பயிர் சாகுபடிக்கு முன்னர் பயிர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை கண்டிப்பாக இடவேண்டும் என்றார்.