/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூன்றாண்டாக முடங்கிய செஞ்சிலுவை சங்கத்திற்கு உயிர் கொடுங்க ஆபீசர்ஸ்.. நிர்வாகத்தை சீரமைக்க மனது வைப்பாரா கலெக்டர்
/
மூன்றாண்டாக முடங்கிய செஞ்சிலுவை சங்கத்திற்கு உயிர் கொடுங்க ஆபீசர்ஸ்.. நிர்வாகத்தை சீரமைக்க மனது வைப்பாரா கலெக்டர்
மூன்றாண்டாக முடங்கிய செஞ்சிலுவை சங்கத்திற்கு உயிர் கொடுங்க ஆபீசர்ஸ்.. நிர்வாகத்தை சீரமைக்க மனது வைப்பாரா கலெக்டர்
மூன்றாண்டாக முடங்கிய செஞ்சிலுவை சங்கத்திற்கு உயிர் கொடுங்க ஆபீசர்ஸ்.. நிர்வாகத்தை சீரமைக்க மனது வைப்பாரா கலெக்டர்
ADDED : அக் 04, 2024 06:49 AM

மதுரை : மதுரையில் முடங்கி கிடக்கும் செஞ்சிலுவை சங்கத்தை சீரமைக்க, தேர்தலை நடத்தி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.
அரசு சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் செஞ்சிலுவை சங்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரே இதன் தலைவர். வெள்ளம், வறட்சி, விபத்து உட்பட பேரிடர் காலங்களில் இந்த அமைப்பினர் எதிர்பார்ப்பின்றி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவர். இதில் ரூ.500 கட்டணத்தில் ஆயுள் உறுப்பினராகலாம். இவர்கள், பொதுமக்களின் நன்கொடை, மாநில, தேசிய அளவிலான சங்க நிர்வாகம் மூலம் பெறும் நிவாரண தொகை, பொருட்களை மாவட்ட நிர்வாக வழிகாட்டுதல்படி தேவைப்படுவோரிடம் சேர்ப்பர்.
முடங்கிய சங்கம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இதில் 1677 பேர் உறுப்பினராக உள்ளனர். இனி நடத்தும் தேர்தலில் இவர்களில் மதுரை மாவட்டத்தினர் மட்டுமே பங்கேற்று, நிர்வாக குழுவில் 11 பேரை தேர்வு செய்வர். சேர்மன், துணை சேர்மன், செயலாளரை சங்கத் தலைவரான கலெக்டர் தேர்வு செய்வார்.
மூன்றாண்டுக்கு முன் நிர்வாகக்குழு தேர்தல் நடந்தபோது உறுப்பினராக இல்லாதோரும் பங்கேற்றதாகக் கூறி அப்போதைய கலெக்டர் அனீஷ்சேகர், தேர்தலை ரத்து செய்து, சங்க செயல்பாடுகளை முடக்கினார். கமிட்டி கலைக்கப்பட்டு, தற்காலிக செயலாளராக ஒருவரே செயல்படுகிறார். தனிநபராக அவர் ஒருவராக, பேரிடர் உதவி, பள்ளி, கல்லுாரிகளில் பேரிடர் மேலாண்மை, முதலுதவி பயிற்சி, ரத்ததான முகாம் நடத்தி வருகிறார்.
அமைப்பு செயல்படாததால் நிவாரண பொருட்களை வாங்க, பாதுகாக்க, பராமரிக்க, வினியோகிக்க ஆட்களில்லை. இந்த அமைப்புக்குரிய ஒரு வாகனம் பழுதடைந்து 3 ஆண்டுகளாக ஒர்க் ஷாப்பில் நிற்கிறது. அதை மீட்டுச் செல்லுமாறு தெரிவித்தும், எடுத்து வர ஆளில்லை.
மீட்க நடவடிக்கை தேவை
வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நேரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் தேவை உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு உயிரூட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஆர்.சீனிவாசன் கூறுகையில், 'எந்த எதிர்பார்ப்பும் இன்றி செயல்படும் செஞ்சிலுவை சங்கத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளேன். பேரிடர் மேலாண்மை, முதலுதவி குறித்த பயிற்சிகளை பெற்றுள்ளேன். சங்கத்தை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுத்தால் பணியாற்ற தயாராக உள்ளேன்'' என்றார். இதுகுறித்து தற்போதைய செயலாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, ''சங்கத்தை செயல்படுத்துவது குறித்து கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்'' என்றார்.