/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பு; அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது அன்னதானத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
/
அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பு; அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது அன்னதானத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பு; அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது அன்னதானத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
அதிகாரிகள் தான் மக்களுக்கு பொறுப்பு; அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது அன்னதானத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : நவ 04, 2025 05:17 AM
மதுரை:  திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அரசு மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
பஞ்சம்பட்டி ராஜாமணி ஏற்கனவே தாக்கல் செய்த மனு: பஞ்சம்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி (நேற்று) கோயிலுக்கு அருகில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி கோரி ஆத்துார் தாசில்தாரிடம் மனு அளித்தேன். நிராகரித்தார். பஞ்சம்பட்டியிலிருந்து முன்னிலைக்கோட்டைக்கு செல்லும் பொது சாலையாக உள்ள மாற்று இடத்தை ஒதுக்கினார். நிராகரித்தது சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அரசு தரப்பு : மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நடத்த அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்.
வழக்கில் எதிர்மனுதாரர் சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பு: மைதானத்தின் ஒரு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு மேடை கட்டப்பட்டது. அது 'பாஸ்கா மேடை' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் பண்டிகையின் போது அம்மேடையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சுரேஷ் பெர்க்மன்ஸை பொறுத்தவரை, ஹிந்துக்களை மத நோக்கத்திற்காக மைதானத்தை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. 2017ல் சமாதான கூட்டம் நடந்தது. 100 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட விழாக்களை தவிர வேறு எந்த விழாவையும் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது என்பதை அவரது தரப்பு தெரிவித்தது. அவரது பதில் மனுவில் பாஸ்கா மேடைக்கு முன் உள்ள திறந்தவெளி ஊராட்சிக்கு சொந்தமானது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மனுதாரரின் கிராமத்தில் 2500 கிறிஸ்தவ குடும்பங்கள், 400 ஹிந்து குடும்பங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களைவிட ஹிந்துக்கள் குறைவாக உள்ளனர். மைதானத்தில் அன்னதானம் நடத்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என போலீசார் கூறுவது வருந்தத்தக்க நிலை. ஒவ்வொரு மத நிகழ்விலும், மற்ற மதத்தினரும் பங்கேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட மைதானம் அரசுக்கு சொந்தமானது. அங்கு நிகழ்ச்சி நடத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படாது. மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சுரேஷ் பெர்க்மன்ஸ், 'அன்னதானத்திற்கு தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு காலை 10:30 மணிக்கு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: 2017 ல் சமாதான கூட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட விழாக்களைத் தவிர வேறு எந்த விழாவையும் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. இதுவரை அங்கு மதம் சார்ந்த அன்னதானம் நடக்கவில்லை. தற்போது அன்னதானம் நடத்த உரிமை கோரியதை, தனி நீதிபதி அனுமதித்துள்ளார். இதன் மூலம் இனி தொடர்ந்து அன்னதானம் நடந்த உரிமை கோருவர்.
இவ்வாறு வாதிட்டார்.
நீதிபதிகள்: அன்னதானம் துவங்கிவிட்டதால் தடை கோரிய மனு காலாவதியாகிவிட்டது. அம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரதான மனு மீதான விசாரணை நவ.,13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. பொதுச் சாலையாக உள்ள மாற்று இடத்தில் அன்னதானம் நடத்தலாம் என தாசில்தார் உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல. அவர் மதியம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். பின் மதியம் 2:40 மணிக்கு இவ்வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். தாசில்தார் முத்துமுருகன் ஆஜரானார்.
நீதிபதிகள்: பொது நோக்கத்திற்காக அரசு இடத்தை யாரும் பயன்படுத்தலாம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அதிகாரிகள் ஏன் தேவையின்றி பிரச்னையை உருவாக்குகின்றனர். சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் மக்களை சந்திப்பதில்லை. கள நிலவரத்தை ஆய்வு செய்தால் தீர்வு ஏற்படும்.
தாசில்தார்: இன்ஸ்பெக்டருடன் பஞ்சம்பட்டியில் ஆய்வு செய்தேன்.
நீதிபதிகள்: மனிதர்களின் உணர்வுகளை அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை. ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். தேவையின்றி அரசியல் கட்சிகள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. அதிக ஓட்டு வங்கி உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. இதனால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தற்போது ஒரு மாதிரியாக பேசுவார். அவர் எதிர்க்கட்சியாக மாறிவிட்டால் வேறு மாதிரியாக பேசுவார். ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். அதிகாரிகள் 60 வயதுவரை பதவியில் இருப்பர்.
அதிகாரிகள்தான் மக்களுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள் மத்தியில் 'ஈகோ' நிலவுகிறது. அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு தேவை.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: சம்பந்தப்பட்ட இடத்தை கிறிஸ்தவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

