ADDED : மே 05, 2025 05:35 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த நெற்கதிர்களை அறுவடை செய்த பின் வைகோல்களை கட்டாக கட்டி விற்கும் பணியில் விவசாயிகள், வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 2ம் போக சாகுபடி அறுவடை இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்த வைக்கோல், மற்றொரு இயந்திரம் மூலம் உருளையாக கட்டப்படுகிறது. இவை பல்வேறு பகுதிகளுக்கும் கால்நடைகளின் தீவனத்திற்காக விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். முன்பு ஒரு ஏக்கரில் உள்ள வைக்கோல் ரூ.4000க்கு விற்றது. தற்போது அவை ரூ.2000க்கு விற்கிறது என நெல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முள்ளிப்பள்ளம் விவசாயி யாகூப் கான் கூறுகையில், ''கிணற்று நீரைக் கொண்டு நடவு செய்து முன்கூட்டியே அறுவடை செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் விளைந்த வைக்கோலுக்கு ரூ.4000 கிடைத்தது. தற்போது பரவலாக அறுவடை நடப்பதால் வைக்கோல் தரத்திற்கு ஏற்ப ரூ.2000 முதல் 2500 வரை கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தொகையும் இயந்திர வாடகைக்கே சரியாகி விடுகிறது. மழை துவங்கினால் வியாபாரிகள் வைக்கோல் வாங்கமாட்டார்கள், நஷ்டம்தான் என்றார்.