
ரோட்டில் கழிவுநீர்
பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் 4வது தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சக்திவேல், பெத்தானியாபுரம்.
* எரியாத தெருவிளக்குகள்
மாநகராட்சி 35வது வார்டு அண்ணாநகர் நியூ எச்.ஐ.ஜி., காலனியில் 6 மின் விளக்குகள் எரியாததால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். அதிகாரிகள் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
- ரமேஷ், அண்ணாநகர்.
* ஆக்கிரமிப்பை அகற்றுங்க
மதுரை தெப்பக்குளம் - அனுப்பானடி ரோட்டில் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப்பின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். பாதசாரிகள், மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- மோகன், அனுப்பானடி.
* சாக்கடை மூடி ஆபத்து
மாநகராட்சி 22வது வார்டு செங்கோல் நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதுடன், வாகன ஓட்டிகளை காவு வாங்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோகரன், ஆரப்பாளையம்.
* பொது சுகாதாரம் தேவை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சி வாகன நிறுத்தம், எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தம், வண்டியூர் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வாகனங்களை நிறுத்துகின்றனர். அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை மாநகராட்சியும், கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் செய்து கொடுக்க வேண்டும்.
- ராமகிருஷ்ணன், எல்லீஸ் நகர்.
* கழிவு நீரால் அவதி
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம், பெரியசாமி நகர் 4வது குறுக்குத் தெரு குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை வெளியேறி வருகிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சியினர் சாக்கடை அடைப்பை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மஹத், தத்தனேரி.
* பள்ளி எதிரே குப்பை
பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே குப்பை குவிந்துள்ளது. பள்ளி அருகே வசிப்போரும், ஓட்டல்களில் இருந்தும் அதிகளவில் கொட்டுவதால் தெருநாய் தொல்லை, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதர்ஷினி, வாசன் நகர்.