
நாய்கள் தொந்தரவு
மாநகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகர், கே.வி.ஆர்.நகர் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிப்பதால் விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், மகாலட்சுமி நகர்.
எரியாத தெரு விளக்கு
மதுரை புது நத்தம் ரோட்டில் இருந்து நாகனாகுளம் செல்லும் ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இருட்டை பயன்படுத்தி இரவில் வழிப்பறி அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தெருவிளக்குகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜன் பாபு, நாகனாகுளம்.
குப்பையால் சீர்கேடு
மதுரை உச்சபரம்பு மேடு - பனங்காடி ரோட்டில் குப்பையை முறையாக அப்புறப்படுத்தாததால் தொட்டி நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. ரோடு வரை குப்பை சிதறிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் குப்பையை அகற்ற வேண்டும்.
- சரவணன், பனங்காடி.
இருள் நீடிக்கிறது
மாநகராட்சி 60வது வார்டு எல்லீஸ்நகர் விரிவாக்கம் சாலைநகர் 2வது தெருவில் 4 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாமல் இருள் நீடிக்கிறது. இருட்டில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தடுக்கி விழுகின்றனர். திருட்டு அதிகம் நடக்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வடிவேல், எல்லீஸ்நகர்.
உயரமான படிக்கட்டுகள்
நகரில் உலா வரும் பஸ்களில் படிக்கட்டுகள் உயரமாக உள்ளன. முதியவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் ஏறி இறங்குவதில் சிரமம் உள்ளது. அவர்களின் நலன் கருதி தாழ்தள பஸ்களை அதிகம் இயக்க வேண்டும். போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபாலன், மாட்டுத்தாவணி.
மாசடையும் கால்வாய்
மாநகராட்சி 36வது வார்டு தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவின் வடக்கு பகுதி கால்வாயில் குப்பை கொட்டுவதாலும், பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவதாலும் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துாய்மைப் பணியாளர்கள் குப்பையை அகற்ற வேண்டும்.
- நாகசுப்பிரமணியன், தாசில்தார் நகர்.
சாக்கடை அடைப்பு
தத்தனேரி பாக்கியநாதபுரம் கே.டி.கே., தங்கமணி நகர் 9வது தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவுநீர் ரோட்டில் வெளியேறி வருகிறது. பலமுறை மாநகராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடை அடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- செந்தில், தத்தனேரி.
மெகா பள்ளம்
காளவாசல் சிக்னலில் அரசரடியில் இருந்து தேனி ரோடு செல்லும் வழியில் மெகா பள்ளம் உள்ளது. வாகன ஓட்டிகள் அப்பகுதியை மெதுவாக கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரவன், பொன்மேனி.