
தோண்டிய பள்ளத்தை மூடுங்க
மதுரை மாநகராட்சி 21வது வார்டு செங்கோல் நகர் சந்திப்பு அருகில், வாகன போக்குவரத்து மிகுந்த மெயின் ரோட்டில் குடிநீர் பணிக்காக தோண்டிய பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோ, செங்கோல் நகர்
வாய்க்காலைக் காணோம்
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள நஞ்சுண்ட லிங்கேஸ்வரர் கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவரை ஒட்டி 10 அடி அகலத்திற்கு பாசன வாய்க்கால் இருந்தது. தற்போது மண், கற்கள் குவிந்து வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் உள்ளது. அதிகாரிகள் வாய்க்காலை மீட்க வேண்டும்.
- சுப்பிரமணியன், எம்.எம்.சி., காலனி
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி, போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- காசி, தெற்குவாசல்
அரசு பஸ்கள்கட்சிப் பணிக்கா
மதுரையில் நடந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கு அரசு பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. பல இடங்களில் பஸ் கிடைக்காமல், கிடைத்த பஸ்களில் ஏறியதால் பயணிகள் நெரிசலில் தவித்தனர். கட்சிப் பணிக்காக அரசு பஸ்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
- செந்தில்குமார், திருப்பரங்குன்றம்
குப்பை குவியல்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் குப்பை குவிந்து தெருவே 'மணக்கிறது'. பக்தர்கள் நோய் தொற்றுடன் வீடு திரும்பும் நிலையுள்ளதால், குப்பையை உடனுக்குடன் அகற்ற சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்திரன், வில்லாபுரம்