
பாதியில் நிற்கும் பராமரிப்பு பணிகள்
மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு அருகில் குடிநீர் இணைப்பு பராமரிப்பு பணிகள் ஒரு மாதம் ஆகியும் முடியவில்லை. விரைவில் பணியை முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சூர்யா, எல்லீஸ்நகர்.
பாம்புகளால் ஆபத்து
மங்களகுடி மேற்குபுறம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாம்புகள் அடிக்கடி வருகின்றன. குழந்தைகள் இருப்பதால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
- வெற்றிவேல், மங்களகுடி.
வாய்க்காலின் பரிதாப நிலை
அவனியாபுரம் 5 அடி கால்வாய் தண்ணீரின்றி, புல்வெளியாய் மாறி விட்டது. சில இடங்களில் மரமே முளைத்து விட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலாஜி, தல்லாகுளம்.
நடுரோட்டில் பள்ளம்
மதுரை கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. இரவில் வாகனங்களில் வருவோர் தடுக்கி விழ வாய்ப்பு அதிகம். போர்க்கால அடிப்படையில் தார் ரோடு அமைக்க வேண்டும்.
- - சக்திவேல், கீழவாசல்.
சாக்கடை அடைப்பு
மதுரை புதுார் காந்திபுரம் பாண்டியன் நகர் கடைசி தெருவில் சாக்கடை அடைப்பாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் குடியிருப்போர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வக்குமார், கோ.புதுார்.
தேவை ஓய்வறை
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் போதிய ஓய்வறைகள் இல்லாததால் பயணிகள் தரையில் படுக்கின்றனர். நாய்களும் திரிவதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளீஸ்வரன், சிலைமான்.
விபத்தை ஏற்படுத்தும் ரோடு
மதுரை முடக்குசாலை ரோட்டின் நடுவே உள்ள பள்ளங்களால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்கு ஆளாகின்றனர். போதிய மின்விளக்குகளும் இல்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினேஷ் பாண்டியன், எச்.எம்.எஸ். காலனி.