/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரு பக்கம் முட்ட வருது... மறுபுறம் கடிக்க வருது... பாடாய்படும் பாம்பன் சுவாமி நகர் மக்கள்
/
ஒரு பக்கம் முட்ட வருது... மறுபுறம் கடிக்க வருது... பாடாய்படும் பாம்பன் சுவாமி நகர் மக்கள்
ஒரு பக்கம் முட்ட வருது... மறுபுறம் கடிக்க வருது... பாடாய்படும் பாம்பன் சுவாமி நகர் மக்கள்
ஒரு பக்கம் முட்ட வருது... மறுபுறம் கடிக்க வருது... பாடாய்படும் பாம்பன் சுவாமி நகர் மக்கள்
ADDED : ஜன 27, 2025 05:03 AM

மதுரை : மதுரை அவனியாபுரம் பாம்பன் சுவாமி நகர் (வார்டு 92) பகுதியில் திறந்தவெளி கால்வாய் இருப்பதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. தெருவில் சுற்றும் மாடுகளாலும், நாய்களாலும் மக்கள் அச்சத்தில் செல்கின்றனர்.
இந்த வார்டில் பெரியசாமி நகர், அக்ரஹாரம், எம்.எம்.சி., காலனி, வேலன் செட்டி தெரு, திருப்பதி நகர் உள்ளிட்ட தெருக்களில் 5500 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நீர் ஆதாரமாக உள்ள புதுக்குளம் கண்மாய் வறண்டு வருகிறது. கழிவுநீர் கலப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புகார் கூறியும் பலனில்லை
ரமேஷ்: இரவில் சுற்றித் திரியும் மாடுகள் குறித்து உரிமையாளர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இரவில் குறைந்த வெளிச்சம் தரக்கூடிய தெருவிளக்குகளால் பயனில்லை. தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
ஒரு நாய் ஒரே நாளில் 7 பேரை கடித்துள்ளது. மாநகராட்சிக்கு வீடியோ அனுப்பி புகார் தெரிவித்தால் 2 நாட்களுக்கு கழித்துதான் வருகிறார்கள். வருமுன் காப்பதே சிறந்தது. நாய் கடித்த பிறகுதான் ஏரியாவுக்கு வருகின்றனர். வந்தாலும் கடித்த ஒரு நாயை மட்டும் பிடித்துச் செல்கின்றனர்.தெரு நாய்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
நடக்க வழியில்லை
- முத்து கருப்பன்: 4 மாதங்களாக 5 நாட்களுக்கு ஒரு முறை தான் மாநகராட்சி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக அமைத்து ஓராண்டாகிறது. ஆனாலும் ரோடுகள் சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பெரியசாமி நகர், குருநாதன் தெரு உட்பட குறுகலான தெருக்களிலும் ரோடுகளிலும் நடப்பதற்கு ஏதுவாக இல்லை. பாதாளச் சாக்கடை வேண்டும். மழை நீர்வடிகால் அமைக்க வேண்டும். குப்பையை தினசரி 2 முறை எடுத்தால் சுத்தமாக இருக்கும். ஆனால் ஒரு முறை மட்டுமே வருகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேட்டுக்கிட்டே இருக்கேன்
தி.மு.க., கவுன்சிலர் கருப்பசாமி: தெருநாய்களை கட்டுபடுத்த மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். வீட்டு நாய்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும். அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் சோதனை நடத்தியுள்ளோம்.
மார்ச் மாதத்தில் திட்டம் நடைமுறை படுத்தப்படும். அம்ரூத் திட்டம் தொடங்கியுள்ளதால் 2 ஆண்டுகளுக்குள் பாதளாச் சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டம் முடிக்கபட்டு அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும். 55 தெரு விளக்குகள் போட்டுள்ளோம். வாட்ஸ் அதிகமாக மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம்.
மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றி டி.வி.எஸ்., நகர், -அவனியாபுரம் பகுதியில் இணைப்பு ரோடு அமைக்கவும் வைக்கம் பெரியார் நகர், அவனியாபுரம் இருவழி ரோடு அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். அயன்பாப்பகுடி, புதுக்குளம் கண்மாய் துார்வாரப்பட வேண்டும். பலமுறை கேட்டும் தீர்வு இல்லை.
புதிதாக சுகாதாரம் மையம் ரூ. 50 லட்சம் செலவில் அமைத்துள்ளோம். நல்லதங்கால் ஊருணி சீரமைத்து நடைபயிற்சி இடமாக மாற்ற ரூ. 2 கோடி நிதி கேட்டுள்ளோம். விரைந்து துாய்மை பணியாளர்கள் காலை மட்டுமே வருகின்றனர். மாலையிலும் வர மாநகராட்சி கூட்டத்தில் கூறியுள்ளோம். விரைந்து திட்டங்கள் செயல்படுத்தபடும் என்றார்.

