ரேஷன் கடைகளுக்கு வெங்காய விநியோகம் ரத்து: பேச்சு வார்த்தையில் சுமூகம்
ரேஷன் கடைகளுக்கு வெங்காய விநியோகம் ரத்து: பேச்சு வார்த்தையில் சுமூகம்
UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:08 PM

மதுரை: தரமில்லாத வெங்காயத்தை வாங்க ரேஷன் கடைகளை கட்டாயப்படுத்தவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜா, பதிவாளர் லதா உறுதியளித்ததை அடுத்து தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.
சங்க மாநில நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:
பெரிய வெங்காய விலை உயர்வை அடுத்து நாசிக்கில் என்.சி.சி.எப்., மூலம் தமிழக கூட்டுறவுத்துறை 450 டன் வெங்காயத்தை வாங்கியது. அளவு சிறிதாகவும் 30 சதவீதம் அழுகிய நிலையிலும் இருந்ததால் ரேஷன் கடைகளில் விற்பதற்கு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்பட்டாலும் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,30ல் தற்செயல் விடுப்பு போராட்டம் (சி.எல்.,) நடத்தினோம்.
இதையடுத்து அமைச்சர் காந்திராஜா, கூட்டுறவுத்துறை பதிவாளர் லதா தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
சி.எல்., போராட்டம் நடத்தியதற்கான 17 ஏ அறிவிப்பை ரத்து செய்வது, மாவட்ட அளவில் அனைத்துப் பதவிகளுக்கும் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் செய்வது, மூன்று மாதமாக குறைக்கப்பட்ட ஜூனியர் இன்ஸ்பெக்டர் பதவிக்கான பயிற்சியை மீண்டும் ஒன்பது மாதமாக்குவதற்கு உறுதியளித்தனர் என்றனர்.
