/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களின் இயக்கம் 'பிரேக் டவுன்' : நிலுவை தொகையால் வழங்க மறுக்கும் ஐ.ஓ.சி.,
/
டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களின் இயக்கம் 'பிரேக் டவுன்' : நிலுவை தொகையால் வழங்க மறுக்கும் ஐ.ஓ.சி.,
டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களின் இயக்கம் 'பிரேக் டவுன்' : நிலுவை தொகையால் வழங்க மறுக்கும் ஐ.ஓ.சி.,
டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களின் இயக்கம் 'பிரேக் டவுன்' : நிலுவை தொகையால் வழங்க மறுக்கும் ஐ.ஓ.சி.,
ADDED : மார் 21, 2024 02:15 AM

மதுரை: நிலுவைத் தொகை அதிகரிப்பால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.,) டீசல் வழங்க மறுத்து வருவதால் அரசு பஸ்கள் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 40 க்கும் மேற்பட்ட டெப்போக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் பழுதடைந்த, இயங்காத நிலையில் உள்ளவை போக, மீதியுள்ள 900க்கும் மேற்பட்ட பஸ்கள்தான் ஓடுகின்றன. போக்குவரத்து கழகத்திற்கு 'பல்க்' ஆக டீசல் தேவைப்படுவதால் குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனங்களின் 'பங்க்'குகள் மூலம் டீசல் லாரிகளை டெப்போக்களுக்கு கொண்டு வந்து டீசலை பெற்றனர். இவ்வகையில் பல பங்க்குகளுக்கு ரூ. பல கோடி தொகை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பங்க்குகள் டீசலை தொடர்ந்து வழங்க மறுத்துவிட்டன.
இதையடுத்து ஐ.ஓ.சி.,யிடம் நேரடியாக டீசலை பெற்றனர். அவர்களுக்கும் ரூ.26 கோடி நிலுவையானதால் ஐ.ஓ.சி.,யும் டீசல் தர மறுத்துவிட்டது. இதனால் நேற்று மாலை முதல் டெப்போக்களில் டீசல் இல்லாமல் பஸ்கள் தவித்தன. நிலைமை மோசமானதால் மதுரையில் டீசல் இல்லாத டெப்போக்களைச் சேர்ந்த பஸ்களை, டீசல் இருந்த பெரியார் பஸ் ஸ்டாண்ட், புதுார், மேலுார் பகுதி டெப்போக்களில் இருக்கும் டீசலை பயன்படுத்த உத்தரவிட்டனர். இதனால் அங்கு ஏராளமான பஸ்கள் தேங்கி நின்றன. இதையடுத்து போக்குவரத்துக் கழக மேலாளர்கள் ஐ.ஓ.சி., அலுவலகத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் பஸ்களின் வசூலில் கவனம் செலுத்தாமல் செயல்படுவதால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில் மதுரை மண்டலத்தில் ரூ.1.92 கோடி அளவுக்கு வசூல் குறைந்துள்ளது. திண்டுக்கல்லில் ரூ.94 லட்சம், விருதுநகரில் ரூ.64 லட்சம் அளவுக்கு வருவாய் குறைந்துள்ளது. அரசு வழங்கும் மானியத்திலேயே பஸ்கள் மட்டுமல்ல போக்குவரத்து நிர்வாகமும் ஓடும் நிலையில் உள்ளது. இந்நிலை நீடித்தால் இன்று பஸ்கள் இயக்கமே முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
மேலாண்மை இயக்குநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, ''அப்படியெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை. உடனே சரியாகிவிடும்'' என்றார்.

