/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லு விளையுது... பருத்தி 'பதுங்குது'... உசிலம்பட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்வால் n 2000 ஏக்கரில் பயிரிட்டு விவசாயிகள் ஆர்வம்
/
நெல்லு விளையுது... பருத்தி 'பதுங்குது'... உசிலம்பட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்வால் n 2000 ஏக்கரில் பயிரிட்டு விவசாயிகள் ஆர்வம்
நெல்லு விளையுது... பருத்தி 'பதுங்குது'... உசிலம்பட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்வால் n 2000 ஏக்கரில் பயிரிட்டு விவசாயிகள் ஆர்வம்
நெல்லு விளையுது... பருத்தி 'பதுங்குது'... உசிலம்பட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்வால் n 2000 ஏக்கரில் பயிரிட்டு விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 14, 2024 06:57 AM

மதுரை; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடிக்கு மாறிவருகின்றனர். வணிகப்பயிரான பருத்தி சாகுபடி பரப்பளவு இந்த ஆண்டு வெகுவாக குறைந்தது.
உசிலம்பட்டி பகுதியில் மழைப்பொழிவு குறைவால் மானாவாரி பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வந்தது. சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் மானாவாரி நிலங்களின் பிரதான பயிராக உள்ளது.
பருத்தி, நிலக்கடலை போன்ற வணிகப்பயிர்கள் மானாவாரியாகவும், கிணறு, போர்வெல் போன்ற நிலத்தடி நீரைப்பயன்படுத்தி நடக்கும் பிரதான விவசாயமாகும்.
ஒரு சில ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி 1000 ஏக்கருக்கும் குறைவாகவே நெல் பயிரிடும் பரப்பாக இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக 58 கிராம கால்வாய் மூலமாக உசிலம்பட்டி பகுதியில் 33 கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர் கிடைத்ததால் ஆயிரம் அடிக்கும் கீழே சென்ற நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கைவிடப்பட்ட பல கிணறுகளில் ஊற்று நீர் வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த ஆண்டு 1000 ஏக்கருக்கு குறைவாக இருந்த நெல் சாகுபடி பரப்பு படிப்படியாக உயர்ந்து 2000 ஏக்கரானது. இந்த ஆண்டு கடந்த மாத கணக்கெடுப்பிலேயே நெல் சாகுபடி பரப்பு 2000 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
இந்த பரப்பு மேலும் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பருத்தி சாகுபடி பரப்பு சராசரியாக 2000 ஏக்கருக்கும்மேலாக இருந்தது படிப்படியாக குறைந்து வருகிறது. பருத்தியில் பூச்சி, நோய் தாக்குதலின் காரணமாக நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில் நிலத்தடி நீரால் நெல் விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.
இதே போல திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளிலும் 58 கிராம கால்வாய் தண்ணீரின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு போக சாகுபடியாக இருந்த நெல் விவசாயம், கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான பகுதிகள் நிலத்தடி நீர் உதவியுடன் இரு போக சாகுபடியாக மாறிவருகிறது.
கோடையில் பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில், செலவு மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறையால் நாற்றாங்கால் அமைக்காமல் நேரிடையாக நெல் விதைத்து சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்திற்கு மாறிவருகின்றனர் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

