/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் 'பெயின் கிளினிக்' ; நாள்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் தனிப்பிரிவு
/
மதுரை அரசு மருத்துவமனையில் 'பெயின் கிளினிக்' ; நாள்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் தனிப்பிரிவு
மதுரை அரசு மருத்துவமனையில் 'பெயின் கிளினிக்' ; நாள்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் தனிப்பிரிவு
மதுரை அரசு மருத்துவமனையில் 'பெயின் கிளினிக்' ; நாள்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் தனிப்பிரிவு
ADDED : மார் 19, 2025 04:33 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள், நாள்பட்ட வலி நோயாளிகளுக்காக 'பெயின் கிளினிக்' எனப்படும் வார்டு தனியாக செயல்படுகிறது.
மயக்கவியல் துறையின் ஒரு பிரிவான இந்த கிளினிக் தினமும் காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை புறநோயாளிகள் பிரிவாக செயல்படுகிறது. புற்றுநோயின் தீவிர தாக்கத்தாலும் நாள்பட்ட பிற வலிகளாலும் அவதிப்படும் நோயாளிகள் நேரடியாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை அணுகலாம் என டீன் அருள்சுந்தரேஷ்குமார், மயக்கவியல் துறைத்தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: பழைய மகப்பேறு வார்டு வளாகத்தில் பொது அறுவை புறநோயாளிகள் பிரிவு அருகே மூன்றாண்டுகளாக இந்த பிரிவு செயல்படுகிறது. புற்றுநோய் சார்ந்த வலிகள், கை, கால், தோள்பட்டை, முதுகு, இடுப்பு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் பெரியளவில் கை கொடுக்காது.
சிலருக்கு முகத்திலும் தீவிர வலி இருக்கும். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வாகாது. வலியை குறைப்பதற்கு என்று ஊசி மருந்துகள் உள்ளன.
இவற்றை எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் அதற்குரிய நரம்பில் செலுத்தும் போது சிலருக்கு நிரந்தரமாக வலி தீரும். அல்லது 3 முதல் 4 மாதங்களுக்கு வலியின்றி வாழ்வர். தேவைப்பட்டால் மீண்டும் இதே முறையில் ஊசி செலுத்தி வலியை குறைக்கலாம்.
இதற்கென 'வலி நீக்கியல்' வார்டு தனியாக முதல் மாடியில் 12 படுக்கைகளுடன் செயல்படுகிறது. புறநோயாளிகள் பிரிவில் நோயாளியை ஆய்வு செய்து அதன்பின் அறுவை சிகிச்சை அரங்கில் ஊசி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருநாள் தங்கி மறுநாள் நோயாளிகள் வீடு திரும்பலாம். முதல்வர் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காப்பீட்டு அட்டை இல்லாதவர்களும் பயன்பெறலாம். வாரத்தில் 10 பேருக்கு இந்த முறையில் வலியை நீக்கி வாழ்வு தருகிறோம் என்றனர்.