/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வலி நீக்கியல் துறை 'பெல்லோஷிப்' படிப்பு அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்த வேண்டும்
/
வலி நீக்கியல் துறை 'பெல்லோஷிப்' படிப்பு அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்த வேண்டும்
வலி நீக்கியல் துறை 'பெல்லோஷிப்' படிப்பு அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்த வேண்டும்
வலி நீக்கியல் துறை 'பெல்லோஷிப்' படிப்பு அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்த வேண்டும்
ADDED : மார் 18, 2025 05:52 AM
மதுரை: சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் 'பெயின் கிளினிக்' துறை தனியாக இருப்பதால் 'பெல்லோஷிப் இன் பெயின் மெடிசன்' என்ற இரண்டாண்டு தனிப்படிப்பு உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையிலும் 'பெயின் கிளினிக்' துறை உள்ளதால் மதுரைக்கும் இப்படிப்பை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட வேண்டும்.
முற்றிய நிலை புற்றுநோயாளிகளுக்கு வலி அதிகமாக இருக்கும். அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை எடுக்க முடியாத நிலையில் நோயாளிகள் தீவிர வலியால் வேதனைப்படுவர். இது தவிர மூட்டுவலி, முகவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி என நாள்பட்ட வலி அதிகமாக இருக்கும் நோயாளிகளும் வலியில் இருந்து நிரந்தரமாக விடுபடமுடியாமல் தவிக்கின்றனர். இந்த இரண்டு வகை வலிகளையும் குணப்படுத்த மதுரை, சென்னை அரசு மருத்துவமனைகளில் வலி நீக்கியல் பிரிவு (பெயின் கிளினிக்) தனியாக செயல்படுகிறது. குறிப்பிட்ட நரம்பை மட்டும் தேர்ந்தெடுத்து அதை தற்காலிகமாக செயலிழக்க செய்வது தான் (நியூரோ லைட்டிக் பிளாக், நியூரோலைசிஸ்) சிகிச்சை முறை.
'லோக்கல் அனஸ்தீசியா' என்பதைப் போன்று இதுவும் ஒரு வகை வலி நீக்க முறை.
வலி நிரந்தரமாக குறைந்து விடும். அல்லது தற்காலிகமாக சில மாதங்களுக்கு வலியில்லாமல் நோயாளிகள் நிம்மதியாக இருப்பர். 'டிரைஜம் நியூரால்ஜியா' எனப்படும் முகம் முழுவதுமான நிரந்தர வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது அறுவை சிகிச்சை முறையில்லை என்றாலும் நரம்புகளில் செலுத்தப்படும் ஊசி மருந்து சிகிச்சையை அறுவை சிகிச்சை அரங்கில் தான் செய்ய வேண்டும்.
சென்னையில் மட்டும் புதிய படிப்பு
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் இதற்கென 'பெல்லோஷிப் இன் பெயின் மெடிசன்' என்ற இரண்டாண்டு கால சிறப்பு படிப்பு உள்ளது. ஆண்டுதோறும் இரண்டு டாக்டர்கள் மட்டும் சேர்க்கப்படுகின்றனர்.
'பெயின் கிளினிக்' என்ற பெயரில் மதுரை மற்றும் ஓமந்துாரர் வளாகத்தில் தனித்துறையே உள்ளது. மற்ற அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல்துறையுடன் இணைந்த பகுதியாக உள்ளதால் முழுமையாக செயல்படாது.
மதுரைக்கு ஏன் தேவை
வலி நீக்கவியலில் நிபுணத்துவம், சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். புதிதாக கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு வளாகத்தில் தனியாக 'பெயின் கிளினிக்' கிற்கு தனி அரங்கும் உள்ளது. ஏற்கனவே வகுப்பறை கட்டடங்கள் இருப்பதால் கூடுதல் செலவும் தேவையில்லை. தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட புற்றுநோயாளிகளும் பிறவகை வலிநோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். சென்னையை அடுத்து மதுரையில் தியேட்டர், டாக்டர்கள் இருப்பதால் வரும் கல்வியாண்டிலேயே 'பெல்லோஷிப்' படிப்பை துவங்க வேண்டும்.
'பெல்லோஷிப்' படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்குவதும் அதிகம் செலவாகாது என்பதால் வரும் ஆண்டுகளில் சென்னை, மதுரையை அடுத்து திருச்சி, கோவை, திருநெல்வேலி என முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இப்படிப்பை விரிவுபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார், மயக்கவியல் துறைத்தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில்,
''இங்கு 'பெல்லோஷிப்' படிப்பு கொண்டு வரவேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்'' என்றனர்.